சென்னை நொச்சிக்குப்பம் திறந்தவெளி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட குத்துச்சண்டை குழுவினரின் ஆக்ரோஷமான பாக்சிங்கை அப்பகுதி மக்கள் சுற்றி நின்று ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
சென்னை மாநகரில் திறமையான பல குத்துச்சண்டை வீரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளிக்கொண்டுவந்த நிலையில், நாங்கள் இன்னமும் இருக்கிறோம் என அவர்களது சந்ததியினர் நிரூபித்து வருகின்றனர்.
பனைமரத் தொட்டி , ராயபுரம், காசிமேடு , தண்டையார்பேட்டை , திருவொற்றியூர் உள்ளிட்ட வட சென்னை பகுதியிலேயே குறிப்பிடத்தக்க அளவில் பாக்சிங் குழுக்கள் இயங்கி வந்த நிலையில் தற்போது பெசன்ட் நகர் , கொட்டிவாக்கம் , நீலாங்கரை , திருவான்மியூர் பகுதி இளைஞர்களும் அதிகளவில் பாக்சிங் பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை நொச்சிக்குப்பத்தில் சுந்தர்ராஜன் மற்றும் பார்த்தசாரதிக் குழு வீரர்கள் ஆக்ரோஷத்துடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டு தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர். இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் கையில் கிளவ்சுடன் களம் கண்ட நிலையில் சுற்றி நின்ற அவர்களது பெற்றோரும் , நொச்சிக்குப்பவாசிகளும் கைதட்டி உற்சாகக் குரல் எழுப்பினர்.
இருதரப்பு பயிற்சியாளர்களும் சண்டையின் இடையே தங்களது வீரர்களுக்கு யுக்திகளை சொல்லிக் கொடுத்தவாறு இருக்க, வீரர்கள் இருவர் சார்பட்டா பட "டான்சிங் ரோஸ்" போல கால் நடனமாட களம் கண்டது அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
உள்விளையாட்டு அரங்கங்களில் சண்டையிடுவதை காட்டிலும் திறந்தவெளி மைதானத்தில் சண்டையிடுவது வீரர்களை உற்சாகப்படுத்தும் என கூறப்படும் நிலையில் பல நேரங்களில் காவல்துறையினர் இவ்வாறான சண்டைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 30 ஆண்டுகளாக குத்துச்சண்டை பயிற்சி வழங்கி வருவதாகக் கூறும் சார்பட்டா பரம்பரை வீரர் சுந்தர்ராஜூ என்பவரது மகன் தமிழ்ச்செல்வன், சென்னையில் 300 இளைஞர்கள் தன்னிடம் பயிற்சி பெறுவதாக தெரிவித்தார். தமிழ்நாடளவில் 2 போட்டிக் குழுக்களாக இயங்கி வரும் குத்துச்சண்டைக் குழுக்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் ஒலிம்பிக் போட்டிவரை களம் காண தகுதியான வீரர்களை சென்னையில் உருவாக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குத்துச்சண்டையில் சாதிக்கத் தகுதியான இளைஞர்கள் பலர் சென்னையில் இருக்கும் நிலையில் போதுமான பயிற்சி அரங்குகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்கள் சாதிக்க இயலும் என்பதே அனைவரின் நம்பிக்கையுமாக உள்ளது.