வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி கிரெடிட் கார்டு தகவல்களை கேட்டுப் பெற்று அதன் மூலம் டெல்லி மின்வாரியத்தில் மின் கட்டணம் செலுத்தி, நூதன முறையில் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இருவர் பிடிபட்டுள்ளனர். அப்பாவி மக்களை குறிவைத்து தினுசு தினுசாக திருடும் திருடர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித் தொகுப்பு...
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் கணக்கு வைத்திருக்கும் எஸ்.பி.ஐ. வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, ஒருவன் அவருடைய செல்போன் எண்ணுக்கு அழைத்துள்ளான்.
கோவிந்தராஜுவின் கிரெடிட் கார்டுக்கு பரிசு தொகை மற்றும் பரிசுப்பொருள் விழுந்திருப்பதாகவும், உடனடியாக கார்டு மீதுள்ள தகவல்களைக் கூறி, சிறிது நேரத்தில் செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணையும் கூறி, பரிசுப்பொருள் விழுந்த கிரெடிட் கார்டு தானா என உறுதி செய்து கொள்ளுமாறும் கூறியுள்ளான். உடனடியாக கிரெடிட் கார்டு தகவல்களைத் தெரிவிக்காவிட்டால் பரிசுப் பொருட்கள் கிடைக்காது என்றும் அவன் எச்சரித்துள்ளான்.
மர்ம நபர் கூறியதை நம்பி அவன் கேட்ட தகவல்களைக் கூறியதும் உடனடியாக தனது கணக்கிலிருந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 640 ரூபாய் செலவழிக்கப்பட்டுவிட்டதாக கோவிந்தராஜ் தனது புகாரில் தெரிவித்திருந்தார். விசாரணையில் இறங்கிய போலீசார் மோசடி கும்பல் அழைத்த செல்போன் எண்கள் டெல்லியைச் சேர்ந்தவை என்பதையும் அங்கு அந்த கும்பல் போலி கால் செண்டர் ஒன்றை நடத்தி வருவதையும் கண்டறிந்தனர். டெல்லி சென்று முகாமிட்ட தனிப்படை, அதுல்குமார், குணால் ஆகியோரைக் கைது செய்தது.
தொடர்ந்த விசாரணையில், திருடப்பட்ட பணம் அனைத்தும் டெல்லி மின்சார வாரியத்தில் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்து போலீசார் குழப்பமடைந்தனர். அடுத்தகட்ட விசாரணையில் அந்த குழப்ப முடிச்சு அவிழ்ந்தது. டெல்லி மக்கள் பெரும்பாலும் நேரடியாக மின் கட்டணத்தைச் செலுத்தாமல் தனியார் ஏஜன்சிகள் மூலமாகவே செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. அதுபோன்ற ஏஜன்சிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டுள்ள திருட்டு கும்பல், கிரெடிட் கார்டு தகவல்களைக் கொண்டு மின்வாரியக் கட்டணத்தை செலுத்திவிட்டு, அந்த ஏஜன்சிகளுக்கு குறிப்பிட்ட கமிஷன் தொகையைக் கொடுத்து பணமாகப் பெற்றது தெரியவந்தது.
மின் கட்டணம் மட்டும் அல்லாமல் டிடிஎச் ரீசார்ஜ் செய்தல் மற்றும் செல்போன் ரீசார்ஜ் செய்தல் போன்றவைகளுக்காகவும் திருடிய கிரெடிட் கார்ட் தகவல்களை வைத்து பணம் செலுத்தி, கொள்ளையடித்ததாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். இதே பாணியில் பல்வேறு மாநிலங்களிலும் இந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. திருடர்கள் இருவரையும் சென்னை அழைத்து வந்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
உங்கள் கார்டுக்கு பரிசு விழுந்திருக்கிறது என்றோ, கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றோ கூறி வரும் அழைப்புகளைப் புறக்கணியுங்கள் எனக் கூறும் சைபர்கிரைம் போலீசார், அதுபோன்ற அழைப்புகள் எக்காலத்திலும் வங்கியில் இருந்து வராது என திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.