சென்னை அடுத்த மாங்காட்டில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய 2 பேர் செல்போன் சிக்னல் மூலம் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வைஃபை மூலம் தொடர்பு கொண்டு பேசி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சென்னை அடுத்த மாங்காட்டில் தொடர்ந்து இரவு நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடந்து வந்தன. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார், சம்பவ இடங்களில் பதிவான 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் கொள்ளையர்கள் முகம் முழுவதும் துணிகளை சுற்றிக் கொண்டு தலையில் ஹெல்மெட்டும் அணிந்திருந்தது பதிவாகி இருந்தது.
கொள்ளையர்கள் நடமாட்டம் இருந்த நேரத்தில் அங்கு பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களை பயன்படுத்தி அவர்களை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால் பிறகு தான் கொள்ளையர்கள் வழக்கமான செல்போன் அழைப்பை பயன்படுத்தாமல் இன்டர்நெட் வைஃபை கனெக்சனை பயன்படுத்தி பேசிக் கொண்டது தெரியவந்தது.
இதனை அடுத்து அவர்கள் பயன்படுத்திய வைஃபை கனெக்சன் மூலமாக அவர்களது ஐபி அட்ரஸ் மற்றும் செல்போன் இஎம்ஐ நம்பரைக் கண்டுபிடித்த போலீசார், மதுரவாயலில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் சூரியா, மாட்டுசங்கர் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
இருவர் மீதும் கொலை, வழிப்பறி உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. சிறையில் இருக்கும்போது நண்பர்களான இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்து மதுரவாயலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். போலீசாருக்கு சவால் விடும் வகையில் கொள்ளை அடிக்க வேண்டும் என்ற நோக்கில் திட்டம் தீட்டியுள்ளனர்.
செல்போன் மூலம் பேசினால் டவர் மூலம் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதால், இண்டர்நெட் டாங்கல் வாங்கி வைத்து கொண்டு வைபை மூலம் பேசி கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.சனிக்கிழமை இரவு நேரத்தில் பூட்டி இருக்கும் வீட்டை கண்காணித்து கொள்ளை அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வீட்டில் மோட்டார் சைக்கிள் சாவி இருந்தால் அதனையும் எடுத்து வந்து மோட்டார் சைக்கிளை ஆவணங்களுடன் திருடி வந்துள்ளனர்.
போலீசார் வாகன சோதனையில் மடக்கினால் ஆவணங்களை காட்டி விட்டு தப்பி வந்துள்ளனர். மாங்காடு, குன்றத்தூர், அம்பத்தூர், அயனாவரம் பகுதியில் மொத்தம் 14 வீடுகளில் இவர்கள் இருவரும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இவர்களிடமிருந்து 35 பவுன் நகை, இரண்டரை கிலோ வெள்ளி பொருட்கள், 3 மோட்டார் சைக்கிள்கள், 2,கேமரா 2.லேப் டாப், 3.செல்போன் 2 வைபை டாங்கல், போலியான அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.