வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்த தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அத்தோடு காருக்கான நுழைவு வரியை அடுத்த ஒருவாரத்தில் செலுத்தவும் விஜய்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து 2012-ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான நுழைவு வரிக்கு விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சார்பில், அப்போது, தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மொத்த நுழைவு வரியில் 20 சதவிகித வரியை செலுத்த இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின்பேரில், மொத்த நுழைவு வரியில் 20 சதவீதம் தொகையை விஜய் செலுத்தினார். இந்த சூழலில், 9 ஆண்டுகளுக்குப்பிறகு, விஜய் தொடர்ந்த வழக்கு மீதான தீர்ப்பு, அண்மையில் வெளியானது.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னை பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்க வேண்டுமெனவும் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை தங்கள் தரப்பில் எதிர்க்கவில்லை எனவும், அதை மதிப்பதாகவும் வாதிட்டார்.
வழக்கு தொடர்ந்த போது நுழைவு வரி வசூலிக்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவுகள் அமலில் இருந்ததால் தான் வழக்கை தொடர்ந்தாக விஜய் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவு நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாக வாதிட்ட விஜய் தரப்பு வழக்கறிஞர், ஏராளமானோர் இதே கோரிக்கையுடன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நடிகர் விஜய் மீது மட்டும் தேவையற்ற விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்றார்.
அப்போது, 2012ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி ஏற்கனவே செலுத்தியுள்ள நுழைவு வரி 20 சதவீதம் போக, மீதமுள்ள 80 சதவீதம் வரியை, விஜய் தரப்பில் செலுத்தினால் போதும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் ஆணையிட்டனர்.
விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கியை கணக்கிட்டு வணிக வரித்துறை ஒரு வாரத்தில், செலான் பிறப்பிக்க வேண்டும் என்ற நீதிபதிகள், எஞ்சிய 80 சதவீதம் நுழைவு வரியை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டனர்.