காதலித்து திருமணம் செய்து கொண்டு 7 மாத கர்ப்பிணியாக கைவிட்டுச் சென்ற கணவனை 45 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப் போராட்டத்தின் மூலம் தண்டித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
1975 - ஆம் ஆண்டு கொளத்தூர் ஜி.கே.எம் காலணி பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளவரசி எஸ்எஸ்எல்சி முடித்து விட்டு, அரசு வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். அதேபகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான விஜய கோபாலன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
பிறிதொரு நாளில் வீட்டை விட்டு வெளியேறி திருமணமும் செய்துகொண்டனர். இளவரசி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது வேலைக்காக ஹைதராபாத் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற விஜயகோபாலன், அதன்பின் மாயமானதாகக் கூறப்படுகிறது.பல மாதங்கள் கடந்தும் விஜயகோபால் எங்கு சென்றார் என்ன ஆனார் எனத் தெரியாத நிலையில், இளவரசிக்கு அவரது குடும்பத்தினர் அடைக்கலம் கொடுத்தனர்.
பெண் குழந்தை பிறந்து, இளவரசிக்கு அங்கன்வாடி பணியாளராக வேலையும் கிடைத்தது. அதன்பிறகு ஒருநாள் தன்னை கைவிட்டுச் சென்ற விஜய கோபால் காவல்துறையில் பணிபுரிவதும், 1985ல் விஜய கோபால் வேறொரு திருமணம் செய்து கொண்டதும் தெரிந்து அதிர்ச்சியடைந்தார் இளவரசி. தன்னை ஏற்றுக்கொள்ளாத கணவன் குறித்து போலீசில் புகாரளித்தும், விஜய் கோபாலன் காவல்துறையில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார் இளவரசி.
நம்பிக்கையையும் உறுதியையும் இழக்காமல் விஜயகோபாலனுக்குப் பிறந்த மகள் தேவியுடன் தொடர் சட்டப்போராட்டத்தை முன்னெடுத்தார் இளவரசி. காவல்துறையில் புகாரளிக்கும்போதெல்லாம் வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்திலேயே பார்த்துக் கொள்வதாக வலுக்கட்டாயமாக தன்னிடம் எழுதி வாங்கிக் கொண்டதாகக் கூறுகிறார் இளவரசி. கடந்த 2010ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பணம் பறிக்கும் நோக்கில் தன் மீது புகாரளித்திருப்பதாக விஜயகோபாலன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு டிஎன்ஏ பரிசோதனையில் விஜயகோபாலன்தான் தனது கணவர் என்பதும், தனது மகளுக்கு அவர்தான் தந்தை என்பதும் உறுதியானதாகக் கூறுகிறார் இளவரசி. ஆனாலும் விஜய கோபாலன் ஓய்வு பெறும்போது, பணியாளர் பதிவேட்டில் தன்னை மனைவி என்றும், தேவி தான் முதல் வாரிசு என்றும் தெரிவிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார் இளவரசி.
நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக 2020-ஆம் ஆண்டு இளவரசிக்கு ஆதரவாக இறுதித் தீர்ப்பு வெளியானது. விஜய கோபாலன் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அனைத்து மகளிர் காவல்துறையினர் 72 வயதான விஜயகோபாலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
45 ஆண்டுகால சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக பெருமூச்சு விடும் இளவரசி, தாமதமானாலும் தனக்கான நியாயம் கிடைத்ததில் மகிழ்ச்சியே என்கிறார்.