ஆன்லைன் செயலியில் முதலீடு செய்தால், வேலை செய்யாமலே சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தை கூறி ஏமாற்றும் "டிராகன் மோசடி" தொடர்பாக காவல் துறையில் புகார்கள் குவிந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திலும், விளையாட்டுகளிலும் பணத்தை இழந்து பலரும் தற்கொலை வரை செல்கின்றனர். அரசு தடை விதித்தாலும் தொடர்ந்து சட்டவிரோதமாக வெவ்வேறு வடிவங்களில் மோசடி கும்பல் இயங்கி வருகிறது. அப்படி புதிதாக வந்துள்தே டிராகன் மோசடி. "லக்கி ஸ்டார்" மற்றும் "ஜெனிசிஸ்" என்ற இரண்டு ஆன்லைன் செயலிகள் மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் பணம் மோசடி செய்த கும்பல் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்து வருகின்றனர்.
லக்கி ஸ்டார் என்ற செயலியை முதலில் பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் போதும், அவற்றை அந்த மோசடி கும்பல் ஆன்லைன் லாட்டரி, விளையாட்டுகளில் போட்டு அதில் வரும் லாபத்தில் 60 சதவீதம் கொடுப்பதாக, அந்த மோசடி நபர்கள் கூறுவார்கள். குறிப்பாக 10 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ஆயிரம் லாபம் கிடைக்கும் எனவும், அதில் 600 உங்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்து, முதலீடு மூலம் தினமும் கிடைக்கும் லாபத்தை செயலி மூலம் தெரிந்துகொள்ளும் வசதியுடன் வடிவமைத்துள்ளனர்.
முதலீட்டு பணத்தை தவிர்த்து கிடைக்கும் லாபத்தை திங்கள் முதல் வெள்ளி வரை செயலியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் எனவும், சனி, ஞாயிற்று கிழமைகளில் இந்த வாலட்டில் இருந்து பணத்தை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர். முதலீடு செய்பவர்களிடம் முதல் ஒரு மாதத்திற்கு பேசியபடி லாபத்தை கொடுப்பார்கள்.
பின்னர், திடீரென ஒரு நாள் அனைவரது கணக்கில் இருந்தும் ஒட்டுமொத்த தொகையும் சுருட்டி விடுவார்கள். அதில் டிராகன் படம் தான் வரும். கேட்டால் டிராகன் ஹேக்கர்களால் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், எவ்வளவு பணம் செயலியில் இருந்ததோ அதே அளவு பணத்தை மீண்டும் முதலீடு செய்தால் மட்டுமே மொத்த பணமும் திரும்பக் கிடைக்கும் என, ஹேக்கர்கள் நிபந்தனை, செயலியின் நிபந்தனை என விதம்விதமாக கதை அளப்பார்கள். மொத்த பணத்தை மீட்க வேண்டும் என்பதற்காக, மீண்டும் பணத்தை முதலீடு செய்து அந்த பணத்தையும் இழந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக ஒரு மாத காலம் தாங்கள் போட்ட பணத்திற்கு ஒரு கணிசமான தொகை கிடைத்ததாகவும், அதனால் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் இந்த செயலியில் இணைய வைத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர். இந்தச் செயலியை நடத்துபவர்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து கொண்டு தங்களுக்கு பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டு வந்ததாகவும் கூறுகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை அமைத்து,செயலிகளில் முதலீடு செய்ய வைத்து தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு, சீன கும்பல் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த கும்பல் பிடிப்பட்டது. இந்த மோசடியில் டிராகனை மையப்படுத்தி நடப்பதால் இதுவும் சீன மோசடி கும்பலாக இருக்குமா என சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.