பத்திரபதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் மூர்த்தி, பணி நேரத்தில் இருக்கையில் இல்லாத அதிகாரியை சிசிடிவி காட்சிகளை வைத்து கையும் களவுமாக பிடித்தார்.
சென்னை சாந்தோமில் உள்ள பத்திரபதிவுத்துறை தலைமை அலுவலகத்திற்கு தமிழக வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி காலை 11 மணி அளவில் ஆய்வுக்கு சென்றார். அங்கு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவிகளின் கட்டுப்பாட்டு அறை உள்ளது.
அங்கிருந்தபடியே தமிழகம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகளை மண்டல வாரியாக பார்க்க முடியும் என்ப்தால் , ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் வெளியே மக்கள் கூட்டமாக உள்ளார்களா? சார் பதிவாளர்கள் முறையாக பணி செய்கிறார்களா? என ஆய்வு செய்தார்.
அப்போது சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் இருக்கை காலியாக இருந்தது. அவருக்காக மக்கள் காத்திருப்பதை அறிந்த அமைச்சர் மூர்த்தி, சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, அந்த இருக்கையில் இருக்க வேண்டிய சார்பதிவாளர் செந்தூர் பாண்டியன் எங்கே என்று கேட்டார். அங்கிருந்தவர்கள் ஆளுக்கொரு பதிலைச்சொல்லி சமாளித்தனர்.
சரியான நேரத்தில் செந்தூர் பாண்டியன் பணிக்கு வந்ததாகவும், தற்போதுதான் வெளியே சென்றதாகவும் ஒருவர் கூறியதால், உடனடியாக அங்கிருந்த கட்டுப்பாட்டு அறைக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் மூர்த்தி... அப்போது சார்பதிவாளர் செந்தூர் பாண்டியன் பணிக்கு வந்த சில நிமிடங்களிலேயே அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
செந்தூர் பாண்டியன் பணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற நேரத்தை அமைச்சருடன் சென்ற உயர் அதிகாரிகள் குறித்துக் கொண்டனர். பத்திரபதிவுக்காக மக்கள் அதிகம் கூடியிருக்கும் நேரத்தில் இருக்கையில் இல்லாமல், வெளியில் சென்ற அதிகாரி செந்தூர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரித்தார்.
மேலும் பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்திச்சென்றார்.
அமைச்சர் மூர்த்தியின் இந்த அதிரடி நடவடிக்கைகளை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்..!