சென்னை மெரீனா கடற்கரை சாலையில், கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில், நடுரோட்டில் உருண்டு புரண்ட பெண், அப்புறப்படுத்த முயன்ற போலீசாரை ஆபாச வார்த்தகளால் அர்ச்சித்து, கலங்கடித்தார். கடற்கரை சாலையில் காலை நடைப் பயிற்சி சென்றவர்கள் மத்தியில் கஞ்சா போதையில் கதகளி ஆடிய லேடியை மருந்து மூலம் ஆம்புலன்சில் ஏற்ற படாதபாடு பட்ட போலீசாரின் பரிதாபத்தை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரினா கடற்கரை சாலையில், நடைபாதையோரம் பலர் வசித்து வருகின்றனர். நடைபாதை வாசிகளில் ஒருவரான புதுப்பேட்டையை சேர்ந்த தனலெட்சுமி என்பவர் காலையிலேயே கஞ்சா போதையில் சக நடைபாதை வாசிகளிடம் தகராறு செய்துள்ளார். அந்த தகராறு முற்றி சாலையில் வந்து படுத்து கொண்டு கூச்சலிட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த பெண்ணை சாலையில் இருந்து அகன்று செல்லும்படி வற்புறுத்தினர். ஆனால் அந்த பெண்ணோ போலீசாரை ஆபாச வார்த்தைகளால் பேசி தான் அணிந்திருந்த ஆடையை உயர்த்தி உயர்த்தி காண்பித்து முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
இது ஒரு புறம் இருக்க அந்த பெண்ணை அப்புறப்படுத்த வந்த ஒரு பெண் போலீசை நீ என்னை தொடக்கூடாது ஆண் போலீஸ்தான் என்னை தொட வேண்டும் என சட்டம் பேசி சலம்பலில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் ஒரு வழியாக அந்த பெண்ணை சமாதானப்படுத்தி சாலையின் ஓரமாய் அமர வைத்தனர். அப்போது அவர் படுத்துக் கொண்டே கால்களில் பரத நாட்டியம் அபிநயம் பிடிக்க போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
போதை உச்சத்துக்குப் போக, மீண்டும் சாலையின் நடுவே சென்று அவ்வழியாக சென்ற அரசு பேருந்தை வழிமறித்து ஆட்டம் காட்ட, அதற்குள் போலீசார் அந்த பெண்ணை அப்புறப்படுத்தி உட்கார வைத்தனர். சாலையின் ஓரத்தில் ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் வேடிக்கை காட்டினார்.
கஞ்சா போதை தலைக்கேறிய பெண்ணை என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திணறிய நிலையில், அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி அந்த பெண்ணுக்கு போதை தெளிய வைக்கும் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். திரவத்தை பஞ்சில் நனைத்து மூக்கில் வைத்து தடவ முற்பட்ட போது அந்த பஞ்சை பறித்து தன் உடம்பு முழுவதும் தேய்த்து கொண்டு ஆம்புலன்ஸ் ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார்.
ஒரு வழியாக அந்த பெண்ணை, ஆம்புலன்ஸில் குண்டு கட்டாக ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உள்ளே இருந்த கத்தரிக்கோலை எடுத்து கஞ்சா போதை பெண் ஆவேசம் காட்ட, மறுபடியும் போலீசார் களத்தில் இறங்கி ஒரு வழியாக அவருக்கு கூடுதல் மருந்து கொடுத்த ஆசுவாசப்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.