சென்னையில் சூதாட்டத்தில் ஃபைனான்சியரிடம் ஒரே நாளில் ஐந்து லட்சம் ரூபாயை இழந்த ஆத்திரத்தில், முகமூடி அணிந்து கொள்ளையர்கள் போல் சென்று அவரைத் தாக்கி 20 சவரன் நகை, பணம் ஆகியவற்றை பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற குமார், அமைந்தகரை பகுதியில் ஃபனான்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்ட நிலையில், சூதாட்டத்தில் இறங்கியுள்ளார். அலுவலகத்தில் வைத்தே நண்பர்களுடன் அவர் சூதாடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் சில நண்பர்களுடன் சூதாடிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த கும்பல் ஒன்று உள்ளே நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
பைனான்சியர் குமார் கழுத்து நிறைய எப்போதும் நகைகள் அணிந்திருப்பார் என்று கூறப்படும் நிலையில், முகமூடி கும்பல் அவரைத் தாக்கி 20 சவரன் நகை, மோதிரம், செல்போன் உள்ளிட்டவற்றைப் பறித்துள்ளனர்.
உடனிருந்த நண்பர்களின் செல்போன்களையும் பறித்துக் கொண்ட அந்த கும்பல், சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்களின் செல்போன் நெட்வொர்க்கைக் கொண்டும் விசாரணை மேற்கொண்டனர். இதில் ராம்குமார், முகமது சாதிக், நாகூர் மீரான், சதீஷ், ஹரிஷ், ஜானகிராமன் என ஆறு பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மோகன், சரத் மற்றும் ஆபிரகாம் ஆகியோரைத் தேடி வருகின்றனர். விசாரணையில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் இந்த கொள்ளை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ராம்குமார், நாகூர்மீரான் ஆகியோர் தினமும் இந்த இந்த சூதாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எனவும், சம்பவத்தன்று ஒரே நாளில் 5 லட்சம் ரூபாயை இழந்த ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தி கொள்ளையில் ஈடுபட்டதும் அம்பலமானது.
கைதானவர்களில் இறைச்சிக்கடை நடத்தி வரும் நாகூர் மீரானும் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வரும் ராம் குமாரும் தொடர்ந்து கையிலிருந்த பணத்தையும் கடன் வாங்கிய பணத்தையும் இழந்து, மனைவியின் நகைகளையும் சூதாட்டத்தில் இழந்துள்ளனர்.
சூதாட்டத்தில் ஃபைனான்சியர் குமார் பணம் முழுவதையும் வாரிச் சுருட்டிக் கொண்ட ஆத்திரத்தில் இந்தத் தாக்குதல் மற்றும் கொள்ளையை அரங்கேற்றியதை அவர்கள் ஒப்புக்கொண்ட்டதாக போலீசார் தெரிவித்தனர்.