மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வரும் கலைமகள் வித்யா மந்திர் பள்ளி நிர்வாகிகள் மீது அப்பள்ளியின் நிறுவனரின் மருமகளே புகார் அளித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் இயங்கி வருகிறது கலைமகள் வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளி. இப்பள்ளியின் நிறுவனராக பெருமாள் என்பவரும், நிர்வாகிகளாக அவரது வாரிசுகளும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளியில் பயிலும் மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பெருமாளும், அவரது மூத்த மகன் பால்முருகனும் பாலியல் தொந்தரவு அளிப்பதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை பள்ளியின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்த பெருமாளின் இளைய மருமகளே அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தில் தான் பணியாற்றியபோது பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்கள் தெரியவந்ததாகவும், தனது கணவர் உடல்நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்துவிட்ட நிலையில், இருவரும் சேர்ந்து தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பள்ளியிலுள்ள மேலும் சில நிர்வாகிகள் இந்த விவகாரத்தை மூடி மறைத்து உடந்தையாக செயல்படுவதாகவும், தற்போது பள்ளி மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தாம் புகாரளிப்பதாகவும் கூறிய அவர், இதனால் தனது உயிருக்கும் தனது இரு பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.
பள்ளியின் நிறுவனர் பெருமாள் மற்றும் நிர்வாகி பாலமுருகன் மீதான குற்றச்சாட்டுக்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் காவல் துறையினரிடம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.