அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை குறுக்கு வழியில் பதிவிறக்கம் செய்து யூடியூப்பில் ஆபாச விளையாட்டாக பதிவேற்றம் செய்ததோடு, பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் சாட்டிங்கில் பழகி பணம் பறித்த மதனை தீவிரமாக தேடிவரும் போலீசார், அவனுக்கு சிறந்த யூடியூப்பர் விருது வழங்கிய கருப்பு ஆடுகளை பிடித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் முதலீடில்லாமல் ஆரம்பிக்கும் எளிய தொழிலாகிபோன யூடியூப் சேனலுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிவருகின்றது. இதனை பயன்படுத்தி பலர் தங்கள் உழைப்பால் பயனுள்ள வீடியோக்களை பதிவிட்டு வருமானம் பெறும் நிலையில், அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வி.பி.என் ஆப் மூலம் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து அதில் ஆபாச வார்த்தைகளுடன் பெண்களை தரகுறைவாக பேசி வந்தவன் மதன் என்கிற டாக்சிக் மதன்.
இவன் தனது உருவத்தை காட்டாமல் கிராபிக்ஸ் உருவம் ஒன்றை தனது போட்டோ போல பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் சிலருடன் இரவு நேர சாட்டிங்கில் ஈடுபட்டு பணம் பறித்ததாகவும் கூறப்படுகின்றது. இவன் மீது தற்போது வரை இரு வழக்குகள் பதிந்து காவல்துறையினர் தேடிவரும் நிலையில், ஒரு இளம் பெண்ணுடன் அவன் உரையாடியதை வைத்து சேலத்தில் பதுங்கி இருக்கலாம் என்று அவனுடன் பேசிய பெண்ணை போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். மதன் அங்கிருந்து தப்பியதால் அவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே நாகூசும் வார்த்தைகளால் பெண்களை பேசுவதோடு, சிறுவர்களை சீர்கெடுக்கும் பப்ஜியை திருட்டுதனமாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்து வந்த இந்த மாயாவி மதனின் டாக்சிக் மதன் யூடியூப் சேனலை சிறந்த விளையாட்டு சேனல் என்று ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அண்மையில் விருது வழங்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகர் விக்னேஷ்காந்த்தின் பிளாக்சிப் என்ற அந்த யூடியூப் சேனல் சார்பில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் நேரடியாக செல்லாமல் தனது கூட்டாளிகளை அனுப்பி விருது வாங்கியதை வைத்து அவன் தனது சாட்டிங் மோசடி வேலைகளுக்கு இந்த கும்பலை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கும்பலாக மேடை ஏறியவர்களில் ஒருவன் மதனாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் விருது வழங்கியவர்களையும், மதனுக்காக விருது பெற்றவர்களையும் பிடித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
தன்னை போராளி என்று அடையாளப்படுத்திக் கொண்டு தலைமறைவாகி இருக்கும் மதன், தனது விளையாட்டு சேனல் மூலம் நோயாளிகளுக்கு என்று பேடீம், கூகுள் பே மூலம் லட்சங்களில் நிதி திரட்டியதாக கூறப்படுகின்றது. இந்த தொகை அனைத்தும் சம்பந்தப்பட்டவர்களுக்கு முழுமையாக சென்று சேர்ந்ததாக என்பது குறித்தும் விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.