காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய காதலனின் புரோட்டாக் கடையை, பெண்ணின் உறவினர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் தூத்துக்குடி அருகே அரங்கேறியுள்ளது. ஓடி ஒளிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட நாடோடிக் காதலன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுப்பையூரணி ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த தூத்துக்குடி புரோட்டா கடை உரிமையாளர் முத்துபிரகாஷ். இவர் வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சாதியைக் காரணம் காட்டி பெண்ணின் வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், முத்துபிரகாஷ் உடன் பேசுவதை அந்த பெண் நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று காதலை எடுத்துக்கூறி முத்துபிரகாஷ் பெண் கேட்டபோது, குடும்ப சூழ்நிலையை விளக்கி வேறு இடத்தில் தங்கள் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து விட்டதால் தங்கள் பெண்ணை மறந்து விடும்படி பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால் அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் பழிவாங்கத் திட்டமிட்ட முத்துபிரகாஷ், அந்த பெண்ணுக்கு நிச்சயம் செய்யப்படிருந்த மாப்பிள்ளையின் செல்போன் எண்ணைப் பெற்று, காதலியுடன் தான் இருந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளான். இதனை பார்த்த மாபிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
தங்கள் வீட்டு பெண்ணின் நின்று போனதால் ஆவேசமான பெண்ணின் சகோதரர் பேச்சிப்பாண்டி தலைமையிலான உறவினர்கள், தூத்துக்குடி புரோட்டாக் கடைக்குள் புகுந்து உருட்டுக் கட்டையால் கொத்துப் புரோட்டா போட்டதில் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் சல்லி சல்லியானது..!
விட்டால் போதுமென முத்துபிரகாஷ் ஓட்டம் பிடித்த நிலையில், அவரது வீட்டிலும் கல்வீசி தாக்கிய உறவினர்கள், கொலை வெறியுடன் அவரை தேடிவருவதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ள முத்துபிரகாஷ், உள்ளூர் போலீசார் பாதுகாப்பு வழங்காததால், நாடோடி போல ஊர் ஊராக மறைந்து வாழ்வதாக டிஜிபிக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய பரிதாப நிலையை சுட்டிக்காட்டி பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே முத்து பிரகாஷ் மற்றும் அவரது தந்தை அரசகுமார் செல்லத்துரை கொடுத்த புகாரின் பெயரில் பெண்ணின் சகோதரர் பேச்சிபாண்டி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதை விடுத்து சட்டத்தை கையில் எடுத்து தாக்குதல் நடத்தியது தவறு என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடிவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் காதலிப்பதாகக் கூறி பெண் வீட்டாருக்கு தீராத தொல்லை கொடுத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் சான்றாக மாறி உள்ளது.