சூயஸ் கால்வாயில் எவர் கிவன் கப்பல் சிக்கியதற்கு மம்மிகளின் சாபம் தான் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மார்ச் 23ம் தேதி சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்ற எவர் கிவன் கப்பல் பலத்த காற்று காரணமாக எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் சிக்கித் குறுக்காக நின்று தரைத்தட்டியது. சுமார் 20000 கண்டெய்னர்களை ஏற்றி சென்ற கப்பல் சூயஸ் கால்வாயில் குறுக்காக நின்றதால் அவ்வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் வர்த்தக இழப்பு ஏற்பட்டது. பின்னர், ஒருவார கால முயற்சிக்கு பிறகு சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மீட்கப்பட்டது. நிலைமையும் சீரானது.
இந்த நிலையில் சூயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியதற்கு எகிப்தில் உள்ள மம்மிகளின் சாபமே காரணம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சூயஸ் கால்வாய் மட்டுமின்றி எகிப்தில் அண்மையில் நடைபெற்ற வேறு சில அசம்பாவிதங்களுக்கும் பார்வோன்கள் என்றழைக்கப்படும் மம்மிகளின் சாபமே காராணமாகும் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம், எகிப்து தலைநகர் கெய்ரோவின் Tahrir சதுக்கத்தில் உள்ள மம்மிகளின் அருங்காட்சியகத்தில் உள்ள மம்மிகள் Fustat பகுதியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு ஏப்ரல் 3ம் தேதி மாற்றப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகத்திற்கு இரண்டாம் மன்னர் ராம்செஸ் மற்றும் ராணி அஹ்மோஸ்- நஃபெர்தாரி (Ahmose-Nefertari) யின் மம்மிகளும் மாற்றப்பட உள்ளன.
இந்த நிலையில் ஓரிடத்தில் உள்ள மம்மிகளை வேறு ஒரு இடத்தில் மாற்றுவதால் ஏற்படும் சாபத்தால் தான் எகிப்தில் ஆபத்துகள் ஏற்படுவதாக கட்டுக்கதை பரவ தொடங்கியுள்ளது. மார்ச் 26ம் தேதி எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் 22 பேரும், கெய்ரோவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 23 பேரும் உயிரிழந்தனர். தற்பொழுது சூயஸ் கால்வாயில் பிரமாண்ட கப்பல் சிக்கியது. இதுபோன்ற துயர சம்பவங்களுக்கு மம்மிகளின் சாபமே காரணம் என்று சிலர் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், “மன்னரின் அமைதியை குலைத்தால் மரணம் வந்து சேரும்” என்ற கருத்துக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
எனினும், இத்தகைய கருத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் தொல்லியல்துறை வரலாற்று ஆசிரியர்கள், பார்வோன்களின் வரலாற்றுக்கு ஏற்ற இடத்திற்கு மம்மிக்கள் மாற்றப்படுவதால் அவற்றிற்கு மரியாதை ஏற்படுமே தவிர, சாபம் ஏற்படாது என கூறியுள்ளனர்.