சென்னையில் ரிப்பன் கடையிலிருந்து கணக்கில் வராத 4 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை பூக்கடை நாராயண முதலியார் தெரு மற்றும் ஏகாம்பரம் தெருவில் உள்ள ஆர்கே மெட்டல்ஸ் உள்ளிட்ட 3 ஹார்டுவேர் கடைகளில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு அதன் உரிமையாளர்களிடம் வருமானவரித்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மகேந்திரா ரிப்பன் ஹவுஸ் கடையைக் கை காட்ட, அங்கு சென்று சோதனை நடத்திய அதிகாரிகள், கணக்கில் வராத 4 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அதன் உரிமையாளரான மிதுனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல, வருமான வரித்துறையினர் முயன்றனர்.
அப்போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாகக் கூறி மயங்கி சரிந்த மிதுனை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
கைப்பற்றப்பட்ட 4 கோடி ரூபாய் ஹவாலா பணம் எங்கு கொண்டு செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, 2 தனியார் ஸ்டீல் கடைகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் மேலும் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.