சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் சங்கர் - கலைவாணி தம்பதியரின் மகனான கார்த்திக்குமார் தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு இளங்கலை பயின்று வருகிறார்.
குத்துச் சண்டை கற்றிருந்த தனது தந்தையைப் போலவே தானும் குத்துச் சண்டை பயிற்சி பெற்று, எதிர்காலத்தில் காவல் துறையில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு உள்ளார்.
செவ்வாயன்று மாலை இவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஜோசியர் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.
அப்போது தெருவில் கையில் குழந்தையுடன் கூச்சலிட்டபடியே ஒரு பெண் ஓடி வருவதை பார்த்த இளைஞர் கார்த்திக்குமார், எதிர்முனையில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் கைப்பையை பறித்து வருவதை கவனித்தார்.
சாலையில் பொதுமக்கள், வியாபாரிகள் பலரும் நின்றிருக்க சமயோசிதமாக கார்த்திக்குமார் தனது வாகனத்தை கொண்டு எதிரில் சென்று கொள்ளையர்கள் மீது மோதி கீழே தள்ளினார்.
எழுந்து தப்பியோடிய கொள்ளையர்களில் ஒருவனை பின்னிருந்து பிடிக்க, இருவரும் கத்தியை எடுத்துள்ளனர்.
கார்த்திக் தற்காப்பு சண்டை பயிற்சி பெற்றவர் என்பதால் அதில் ஒருவனை, கத்தியை நீட்டுவதற்குள் தாக்கி கீழே தள்ள, மற்றொருவன் தப்பியோடியுள்ளான்.
அதற்கு பிறகு கீழே விழுந்த கொள்ளையனை அருகில் இருந்தவர்கள் ஓடி பிடித்தனர்.
அவனிடம் இருந்த பணப்பையை மீட்ட கார்த்திக், அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
வங்கியில் இருந்து எடுத்துச் சென்ற ஒரு லட்ச ரூபாய் பணம் பறிபோக இருந்ததை தடுத்து மீட்டுக் கொடுத்ததற்கு அந்த பெண் உருக்கமுடன் நன்றி தெரிவித்து சென்றார்.