நடமாடும் நகைக்கடையாக வலம் வந்து வருமானவரித் துறையினரிடம் சிக்கிய அரசியல் பிரமுகர், மூன்றரை கிலோ நகைகளுடன் மீன்களைத் தேடி ஆழ்கடலுக்குள் சென்று திரும்பிய காட்சிகள் வெளியாகி உள்ளன. குண்டுமணி அளவுத் தங்கம் கூட கழன்று விடாதபடி மொத்தமாக கட்டிப்போட்டு கடலுக்குள் சென்று வந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
தமிழகத்தில் கழுத்திலும் கைகளிலும் கொத்துக் கொத்தாக நகை அணிந்து நகைக்கடை போல வலம் வந்ததால், வருமான வரித்துறையினரால் கொத்தாக தூக்கிச்செல்லப்பட்டவர் பனங்காட்டுப்படை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளர் ஹரி..!
கேரளாவில் ஆழ்கடலுக்குள் சென்று மீன்களை ரசித்துவரும் சுற்றுலாவுக்குச் சென்ற ஹரிக்கு, அவர் கழுத்தில் அணிந்திருந்த கிலோ கணக்கிலான நகைகள் சிக்கலானது.
வழக்கமாக இதுபோன்ற சுற்றுலாவில் கடலுக்குள் செல்பவர்கள் எந்தவித நகையும் அணிய அனுமதி இல்லை. ஆனால் கர்ணனின் கவச குண்டலம் போல தன்னையும் நகையையும் பிரிக்க முடியாது என்று ஹரி அடம் பிடித்ததால் அவருக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
கழுத்தில் அணிந்திருந்த மொத்த தங்க சங்கிலிகளையும் சேர்த்து பிளாஸ்டிக் டேக் கொண்டு இறுக்கமாக கட்டியுள்ளனர். அதே போல அவர் கையில் அணிந்திருந்த தங்க அட்டிகைகளையும் கையுடன் சேர்த்துக் கட்டியுள்ளனர். அதன் பின்னர் நீச்சல் உடை அணிந்து ஆக்சிஜன் சிலிண்டருடன், ஆழ்கடலுக்குள் இறங்கி பயிற்சியாளர் உதவியுடன் நீந்தியுள்ளார் ஹரி.
மூன்றரை கிலோ நகைகளுடன் கடலுக்குள் நீச்சல் அடித்தவர் என்ற சாதனையை செய்ய ஹரி முயன்றாலும் கடலின் அழுத்தம் காரணமாக நீண்ட நேரம் அவரால் கடலுக்குள் நீந்த இயலவில்லை என்று கூறப்படுகின்றது
கடலுக்குள் மீன்களை தேடி நீச்சல் அடித்த அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ஒருவேளை ஜாமீனை தேடி கடலுக்குள் சென்றிருப்பாரோ..? என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்