சென்னை கோபாலபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட செங்காந்தள் பூங்காவை ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
செங்காந்தள் பூ என்பது 7 நாட்கள் வாடாமல் இருக்கும். பல வண்ணங்களாக மாறும் தன்மையுடையவை இதன் இதழ்கள். கார்த்திகை மாதத்தில் பூப்பதால் இதற்கு கார்த்திகைப்பூ என்ற பெயரும் உண்டு.
சென்னை கோபாலபுரம் பகுதியில், 6.8 ஏக்கரில் 5 கோடி ரூபாய் செலவில் பூங்கா உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.செங்காந்தள் பூங்காவில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தநிலையில், கடந்த 22 ந் தேதி முதலமைச்சர் இந்த பூங்காவைத் திறந்துவைத்தார்.
சென்னையின் மையப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் நந்தவனமாக திகழும் இந்த செங்காந்தள் பூங்கா சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பூங்காவாக இருக்கிறது. சிறுவர்கள் விளையாடுவதற்காக விளையாட்டு சாதனங்கள் அடங்கிய திடலும்,இளைஞர்கள் உடல் அமைப்பை திடப்படுத்திக் கொள்ள சிறு வகையிலான உடற்பயிற்சி கூடமும், பெரியவர்கள் அனைவரும் நடைப்பயிற்சி மேற்கொள்ள நீண்ட நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவில் 25 வகையான மரங்களும் 500 வகையான செடி வகைகளும் நடப்பட்டுள்ளன.அதிக அளவிலான மூலிகை தாவரங்களும் இந்தப் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன.
திரும்பும் திசையெல்லாம் கண்கவர் ஓவியங்களும் சிறிய அளவிலான நீர்த்தேக்கமும் இப்பூங்காவிற்கு மேலும் மெருகூட்டுகின்றன. நவீன கழிப்பிட வசதி, திறந்தவெளி அரங்கம், செயற்கை நீரூற்று ஆகியனவும் இங்கு நிறுவப்பட்டுள்ளன.
இத்தகைய எழில் மிகு பூங்காவாக உருவாகி உள்ள இந்த செங்காந்தள் பூங்கா சென்னையின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளுள் ஒன்றாகத் திகழும் என்பது நிச்சயம்.