சென்னை நீலாங்கரையில் கடலுக்கு அடியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் வித்தியாசமான முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருமணமே மறக்க முடியாத தருணமாக இருந்தாலும், அதை மேலும் மெருகூட்டும் விதமாக பாராசூட்டில் திருமணம், விமானத்தில் திருமணம், மலை உச்சியில் திருமணம், கப்பலில் திருமணம் என புது புது ஸ்டைலில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஆழ்கடல் திருமணமும் இடம்பெற்றுள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்த ஐ.டி.ஊழியரான சின்னதுரைக்கும், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வேதாவுக்கும் திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பொழுதுபோக்கிற்காக ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்த சின்னதுரை, தனது திருமணத்தை வழக்கமாக இல்லாமல், வித்தியாசமாக நடத்த நினைத்து, கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தை வீட்டில் கூறியுள்ளார்.
ஆழ்கடலில் திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் ஒப்புக்கொண்டதை அடுத்து, புதுச்சேரியை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரை அணுகியுள்ளனர் அந்த மணமக்கள். திருமணத்துக்கு தயாராகும் விதமாக இருவரும் சில நாட்கள் நீச்சல் பயிற்சியும் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை பாரம்பரிய உடைகள் அணிந்து படகில் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு, சென்னை நீலாங்கரையில், கடலுக்கு அடியில் திருமணம் நடைபெற்றது.
கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 30 அடி ஆழத்தில் மலர்களை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் திருமணம் நடைபெற்றது. பரஸ்பரம் மாலை மாற்றி மணமக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இதுபோன்று வித்தியாசமான முறையில் திருமணம் செய்வது அனைவரையும் ஆச்சரியமடையச் செய்தாலும், அது எல்லாம் விபரீதத்தை உண்டாக்காத வரை மட்டுமே என்பது இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.