சென்னையில் பழங்கால கார்களின் கண்காட்சி மற்றும் கண்கவர் அணிவகுப்பை ஏராளமானோர் ரசித்து பார்த்து மகிழ்ந்தனர். கார் பிரியர்களின் உள்ளம் கவர்ந்த பிரத்யேக நிகழ்வு குறித்து அலசுகிறது, இந்த செய்தித்தொகுப்பு : -
சென்னை - அடையாறு பாலவித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ' மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் ' ஏற்பாடு செய்திருந்த பழங்கால கார் கண்காட்சி, கார் பிரியர்களின் கண்களுக்கு விருந்து படைத்தது. புகைப்படங்களிலும் பழைய திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த கார்கள் ஒரே இடத்தில் வரிசையாக அணிவகுத்து காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன
பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் 1920 முதல் பயன்பாட்டில் இருந்த ஆஸ்டின் செவன் , ஜாகுவார் , பென்ஸ், போர்டு , அம்பாசிடர் , ரோல்ஸ் ராய்ஸ் , செவ்ரோலெட் மற்றும் போரிஸ் ரகம் என காட்சிக்கு வைக்கப் பட்டு இருந்த 37 கார்களையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெகுவாக ரசித்தனர்.
1886ஆம் ஆண்டில் பென்ஸ் தயாரித்த கார் மற்றும் 1896 ம் ஆண்டில் போர்டு தயாரித்த கார்களின் மாதிரிகள், இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு
இருந்தன. 1950 களில் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ .வி.மெய்யப்பச் செட்டியார் பயன்படுத்திய Buick super காரும் பார்வையாளர்களை கவர்ந்தன.
" Old Is Gold " என்பதை நிரூபிக்கும் பழங்கால கார்களை, தங்கள் முன்னோர்களின் சொத்துக்களாக கருதி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பராமரித்து வருவதாக, கார் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர, ராயல் என்பீல்டு, பஜாஜ் ஸ்கூட்டர் உட்பட 12 இரு சக்கர வாகனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியின் நிறைவாக, பழங்கால கார்கள் மற்றும் இரு சக்கர வாகன பேரணி மாமல்லபுரம் நோக்கி அணிவகுத்து புறப்பட்டபோது, உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.