சென்னையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சென்ற இளைஞர்கள் சாலை தடுப்பில் மோதி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 22 வயதான பாலாஜியும் பார்த்திபனும் நேற்றிரவு போரூரில் நடந்த மற்றொரு நண்பனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விட்டு, விலையுயர்ந்த டியூக் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.
விருகம்பாக்கம் அருகே சாலை சற்று வளைவாகச் செல்லும் இடத்திலும் வேகத்தைக் குறைக்காமல் சென்றதாகக் கூறப்படும் நிலையில், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவேயுள்ள தடுப்பில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் சில அடி தூரத்துக்கு தீப்பொறி பறக்க பைக் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.
வெவ்வேறு திசையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிறந்த நாள் நிகழ்வுக்கு சென்று வந்ததால் குடிபோதையில் இருந்ததனரா என்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சாலை வளைவாக உள்ள இடம் என்பதால் அங்கு பேரிகார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்.