விழுப்புரத்தில் 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி தருவதாக அறிவித்து கூட்டத்தை கூட்டிய கடைக்காரரை கைது செய்த காவல்துறையினர், திறந்த அன்றே கடையை இழுத்து பூட்டினர். 10 ரூபாய் பிரியாணிக்கு ஆசைபட்டு இலவசமாக லத்தி அடிவாங்கிய உணவு பிரியர்களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
விழுப்புரம் திருச்சி நெடுஞ்சாலையில் புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை ஓரமாக அரவிந்த் என்பவர் செட் ஒன்றை அமைத்து அதில் புதியதாக பிரியாணி கடையை திறந்தார்.
தான் புதிதாக திறந்துள்ள கடையை பிரபலப்படுத்த திறப்பு விழா சலுகையாக, 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதால் அங்கு கூட்டம் அலைமோதியது
10 ரூபாய்க்கு பிரியாணி கிடைத்த மகிழ்ச்சியில் கையில் பொட்டலத்துடன் சிலர் சென்ற நிலையில் அங்கு கூட்டம் முண்டியடித்ததால் அந்த செட்டே ஆட்டம் கண்டது
ஏராளமான பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து பிரியாணி வாங்க கடையின் முன் குவிந்ததால், அவர்கள் வந்த வாகனங்கள் விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார் அங்கு கூடியிருந்தவர்களுக்கு ரைத்தாவாக லத்தியடி வழங்கி கூட்டத்தை கலைத்தனர். அனுமதியின்றி கூட்டத்தை கூட்டி நோய் பரவலுக்கு வழிவகுத்ததற்காக கடையின் உரிமையாளர் அரவிந்தை கைது செய்ததோடு பிரியாணி அண்டாவையும் பறிமுதல் செய்தனர்.
கடையை திறந்த அன்றே இழுத்து பூட்டிய காவல்துறையினர் சாவியையும் எடுத்துச்சென்றனர்.
மக்களிடையே பிரபலமாகும் ஆசையில் செய்த 10 ரூபாய் டெக்னிக்கால், பிரபலமாக மாறியுள்ளது இந்த பிரியாணி வியாபாரம்..!