கிருஷ்ணகிரியில் லாரியில் சென்ற 15 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தம் புதிய செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், துபாயைச் சேர்ந்த அப்பாஸ் என்பவன் தலைமையிலான சர்வதேச கொள்ளைக் கும்பல் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து மும்பை நோக்கி கன்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 13 ஆயிரத்து 920 செல்போன்களை கடந்த 21ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் மேலுமலை அருகே மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து கொள்ளையடித்துச் சென்றது.
இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான 20 பேர் கொண்ட தனிப்படை போலீசார் டெல்லி, மத்திய பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளியான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்தர் உட்பட 10 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஆந்திரா மாநிலத்தில் கொள்ளையடிக்க பயன்படுத்திய இரண்டு லாரிகளும், தமிழக கொள்ளையில் பயன்படுத்திய இரண்டு லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த கொள்ளைச் சம்பவத்தில் சர்வதேச கொள்ளை கும்பல் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செல்போன்களை கொள்ளையடித்த பின் கொள்ளையர்கள் தங்கள் லாரிகளில் 33 முறை நம்பர் பிளேட்டை மாற்றி மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சென்றுள்ளனர்.
கொள்ளையடித்த செல்போன்களை போபாலில் இருந்து 2000 செல்போன்கள் வீதம் பிரித்து டெல்லி, கொல்கத்தா, மும்பை, கவுகாத்தி, ராய்பூர் பகுதிகளுக்கு விமானம் மூலம் அனுப்பி விட்டு பின்னர் அனைத்து செல்போன்களையும் அந்த பகுதியில் இருந்து திரிபுரா மாநிலத்திற்கு வாகனங்களில் அனுப்பியதாக தெரிவித்து உள்ளனர்.
திரிபுராவில் இருந்து சாலை மார்க்கமாக பங்களாதேஷ் நாட்டிற்கு கொள்ளையடிக்கப்பட்ட புத்தம் புதிய செல்போன்களை அனுப்பி உள்ளது இந்தக்கொள்ளை கும்பல். அதன் பின் செல்போன்களுக்கான தொகையை ஹவாலா பணமாக துபாயைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரிடமிருந்து ஆறரை கோடி ரூபாயை பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழகம், மத்தியப் பிரதேசத்தை கடந்து பங்களாதேஷ், துபாயைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலும் இந்த குற்றசம்பவத்தில் ஈடுபட்டு உள்ளதால் மேலும் 15 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டிய சூழல் உள்ளதாகவும், முக்கிய குற்றவாளியான துபாயைச் சேர்ந்த அப்பாஸ் என்பவனை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் பண்டி கங்காதர் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் திட்டமிடப்பட்டு நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தை சாமர்த்தியமாக செயல்பட்டு ஒரு மாதத்தில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான தனிப்படை குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் செல்போன் லாரியை மறித்து மொத்தமாக அள்ளிக்கொண்டு பங்களாதேஷ் வரை கொண்டு சேர்த்துள்ளது இந்த சர்வதேச கொள்ளைக் கும்பல், மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகள், விமான நிலைய சரக்கு முனையங்கள் வரை திருட்டு பொருள் சர்வசாதாரணமாக கடந்து சென்றிருக்கின்றது.
வட மாநிலங்களில் பதுங்கி இருக்கும் பல்வேறு கொள்ளை கும்பல்களும் பார்சல் சர்வீஸ் நிறுவனங்களும் இந்த மெகா கொள்ளைக்கு உடந்தையாக செயல்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் அப்பாஸை பிடித்தால் கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து துப்பு துலங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.