சேலத்தில் காதல் மனைவியின் 30 சவரன் நகைகளை விற்றும், மாமனாரின் வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை திருடியும் ஆல்லைனில் ரம்மி விளையாண்ட ஊதாரி இளைஞனால் அவனது மனைவி வீதியில் தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். காதல் கோட்டையை தகர்த்த கணவனை தட்டிக்கேட்க தர்ணாவில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வியின் சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
விட்டத்தை பிடிப்பதாக கூறி 40 லட்சம் ரூபாய் வரை ஆன் லைனில் ரம்மி விளையாடி பணத்தோடு சேர்த்து வாழ்க்கையையும் தொலைத்த ஊதாரி இளைஞன் மணிகண்டனால் வீதியில் தவிக்கும் காதல் மனைவி தமிழ்ச்செல்வி இவர்தான்..!
கடந்த 2014ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த நத்தகாட்டூரைச் சேர்ந்த தமிழ்செல்வியை காதல் வலையில் வீழ்த்திய மணிகண்டன் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
பின்னர் சில மாதங்களிலேயே மனைவி தமிழ்ச்செல்வியின் பெற்றோர்களிடம் சமாதானம் அடைந்ததும், நாசுக்காக பேசி மாமனார் வீட்டில் இருந்து 30 சவரன் நகைகளை வரதட்சணையாக பெற்றுள்ளார் மணிகண்டன். திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றித் திரிந்த மணிகண்டன் எப்போதும் ஆன்லைன்னில் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டன், தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு விருந்துக்கு செல்லும் போதெல்லாம் மாமனாரின் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போவது தொடர்ந்துள்ளது. தனது கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வி இது குறித்து கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவன் மீதான சந்தேகம் அதிகரிக்கவே, தனது நகைகளை எடுத்து பார்த்த போது அசல் நகைகளுக்கு பதில் அனைத்தும் கவரிங் நகைகளாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு காதல் கணவனை பிரிந்த தமிழ்ச்செல்வி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மியில் தான் விட்ட பணத்தை பிடிப்பதற்காக தனது மனைவியின் நகைகளை விற்று விளையாடியதாகவும் அந்த பணத்தை பறிகொடுத்ததால், போலி நகைகளை மாற்றி வைத்ததை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.
ஊதாரிக் கணவனை நம்பி வாழஇயலாத நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ்ச்செல்வி தனது நகை மற்றும் பணத்தை திரும்ப கேட்டார். அதற்கு பணம் நகையை 6 மாதத்தில் திருப்பி தருவதாக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துச் சென்ற மணிகண்டன் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தனது நகை பணத்தை திரும்பக்கேட்டு கணவன் மணிகண்டனின் வீட்டிற்கு முன்னால் தெருவில் அமர்ந்து தர்ணாப் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டார் தமிழ்ச்செல்வி..!
ஊதாரிக் காதலனை நம்பி காதலில் விழுந்ததால், காதல் கோட்டை தகர்ந்த சோகத்தில் வீதியில் தவிக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமிழ்செல்விக்கு நியாயம் கிடைக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
அதே நேரத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ள நிலையிலும், குடும்பங்களில் அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. சம்பந்தப்பட்ட ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை முழுமையாக முடக்கி, சூதாட்டத்தின் மூலம் வாரிச்சுருட்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மொத்தமாக பறிமுதல் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை கொண்டுவர வேண்டும் என்பதே பணத்தை பறிகொடுத்து தவிக்கும் குடும்பங்களின் ஏக்கமாக உள்ளது.