மழை வெள்ளத்தால் செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய நீர் நிலைகள் நிரம்பி வழியும் நிலையில், வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயை சமூக விரோதிகள் அடைத்து வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. நீர் வரத்து இல்லாததால் வேடந்தாங்கலுக்கு வரும் வெளி நாட்டு பறவைகள் ஏமாற்றத்துடன் மாற்று இடம் தேடிச்செல்லத் தொடங்கி இருக்கின்றன.
இந்தியாவிலேயே முதல் முறையாக 1936 ஆம் ஆண்டு பறவைகளுக்கு என்று தனியாக அறிவிக்கப்பட்ட சரணாலயம் என்ற பெருமை வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சாரும்..!
ஆஸ்திரேலியா, மியான்மர், பாகிஸ்தான், பங்களாதேஷ், கனடா நாடுகளில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 140 வகையான பறவையினங்கள் அங்கு வந்து செல்வது வழக்கம்.
மொத்தமாக 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரியின் நடுவில் மரங்களும் ஏரியினுள் பறவைகளுக்கு பிடித்த நண்டு நத்தை போன்றவையும் அதிக அளவில் இருப்பதால் பறவைகள் சீசனுக்கு சீசன் தவறாமல் வேடந்தாங்கல் ஏரியை தேடி வந்து விடும். ஆனால் இந்த வருடம் ஏரியில் போதுமான நீர் வரத்து இல்லாததால் வெளி நாட்டு பறவையினங்கள் வந்த வேகத்தில் மாற்று இடம் தேடிச்செல்வதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் வேடந்தாங்கல் ஏரியின் முக்கிய நீர் ஆதாரமான மதுராந்தகம் ஏரியும், வளையபுத்தூர் ஏரியும் நிறைந்துள்ளன. இவற்றின் உபரி நீரை கொண்டு வெளிநாட்டு பறவைகளுக்கு வாழ்வளித்து வந்த வேடந்தாங்கல் ஏரிக்கு போதிய நீர் வரத்து செல்லாமல் தடுக்கப்பட்டிருப்பதாகவும், வேடந்தாங்கல் ஏரிக்கு நீர் வரும் கால்வாயை பாறைகளுடன் மறித்து சமூக விரோதிகள் தடுப்பு அமைத்து மண்மூட்டைகளை கொண்டு அடைத்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த பகுதியில் தொழிற்சாலை விரிவாக்க அனுமதியால் 5 கிலோமீட்டராக உள்ள வேடந்தாங்கல் ஏரி 3 கிலோ மீட்டராக சுருக்க சதி நடப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அபோது அதற்கான அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை. மீண்டும் வேடந்தாங்கல் ஏரியை வற்றவைத்து ஆக்கிரமிக்க திட்டம் தீட்டப்பட்டிருக்குமோ ? என்ற அச்சம் பறவைகள் நல ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, வளையாபுத்தூர் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு செல்லும் நீர்வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் ஏதும் வரவில்லை என்றும் அப்படி அடைக்கப்பட்டிருந்தால் விரைவாக அதனை அகற்றி வேடந்தாங்கல் ஏரிக்கு உபரி நீர் செல்ல வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.
இந்தியாவின் பெருமைக்குரிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை காக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!