கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏவும், திமுக மாவட்டச் செயலாளருமான செங்குட்டுவன் கட்டப்பஞ்சாயத்து செய்து, ஒரு தரப்பை ஜாதி பெயரை சொல்லி, கொலை மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாட்ஸ்அப் குழுக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில், கிருஷ்ணகிரி எம்எல்ஏ செங்குட்டுவன் கடுங்கோபத்துடன் தகாத வார்த்தைகளால் திட்டுவதோடு, ஜாதியைக் குறிப்பிட்டும் கடுமையாக திட்டுவதுபோன்றும் பதிவாகியுள்ளது.
மேலும் தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் தூக்கில் ஏற்றிவிடுவேன் என்று செங்குட்டுவன் கூறுவது போன்றும் அதில் காட்சிகள் உள்ளன.
கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில், இரு தரப்புக்கு இடையேயான நிலபேரம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாகவும், அதில் ஒரு தரப்பைத்தான் செங்குட்டுவன் மிரட்டியதாகவும் புகார் எழுந்தது.
செங்குட்டுவன் கட்டப்பஞ்சாயத்து செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் என திமுகவினரிடையே முனுமுனுப்பு எழுந்துள்ளதாகவும், இந்த வீடியோ கூட திமுகவினரே பதிவு செய்ததுதான் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எம்எல்ஏ செங்குட்டுவன் மறுத்துள்ளார். ஒருவரிடம் பத்தரை லட்சம் ரூபாய் முன்பணத்தை பெற்றுக் கொண்டு, அந்த நிலத்தை வேறொருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து விட்டதாக எழுந்த பிரச்சனை தம்மிடம் வந்ததாகவும், மற்றபடி சம்மந்தப்பட்ட வீடியோ பதிவில் குறிப்பிடப்படும் நிலத்திற்கும் தமக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் செங்குட்டுவன் விளக்கம் அளித்துள்ளார்.