சென்னை வியாசர்பாடி அருகே முகநூல் மூலம் 17 வயது சிறுமியை மயக்கி காதல்வலையில் வீழ்த்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலரை பழிவாங்க சிறுமி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னை வியாசர்பாடி ராஜீவ் காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கேட்டரிங் இன்ஸ்டியூட்டில் படித்து வந்தார்.
எப்போதும் கையில் செல்போனுடன் முகநூலில் மூழ்கி கிடந்த அந்த சிறுமிக்கு, 6 மாதங்களுக்கு முன்பு அரக்கோணத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் முகநூல் மூலமாக அறிமுகனார், புழல் சிறைச்சாலையில் ஆயுதப்படைபிரிவு காவலராக இருப்பதாக கூறிய மகேஷ் , அந்த சிறுமியிடம் நைசாக பேசி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
தொடர்ந்து செல்போன் நம்பர்களை தங்களுக்குள் பறிமாறிக் கொண்ட நிலையில் அந்த காவலர், சிறுமியை பல இடங்களுக்கும் அழைத்துச்சென்றதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது. தற்போது சில நாட்களாக அந்த சிறுமியிடம் பேசுவதை தவிர்த்து வந்த மகேஷ், ஒரு கட்டத்தில் அந்த சிறுமியை கைவிட்டதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே தங்கள் மகளின் காதல் விவகாரம் தெரியவந்ததும் காவலர் மகேஷிடம் நியாயம் கேட்ட போது அவர் ப்ரண்டாகத்தான் பழகினேன் எனவும் தான் போலீஸ் என்பதால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகின்றது. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நியாயம் கிடைக்காத சூழலில், தங்கள் மகள் ஏமாற செல்போனும், முகநூலும் தான் காரணம் என்பதை தாமதமாக உணர்ந்த சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளிடம் இருந்து செல்போனை வாங்கி வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
தனது செல்போனை பெற்றோர் பறித்துக் கொள்ளவும், வாழ்க்கை சீரழியவும், ஏமாற்றிச்சென்ற காதலன் மகேஷ் தான் காரணம் என்பதால் அவனை பழிவாங்கும் விதமாக வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு மண்ணெண்ணையை ஊற்றி தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளார் அந்த சிறுமி..!
அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் முழுவதும் கருகிய நிலையில் 80 சதவீத தீக்காயத்துடன் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் எம்.கே.பி நகர் காவல்துறையினரிடம் தனது சாவுக்கு காவலர் மகேஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றியது தான் காரணம் என்றும் அவரை பழிவாங்கவே தீக்குளித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்
உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும் தன்னிடம் விசாரிக்க வந்தவரை மதித்து அங்கிள் உட்காருங்க என்று அந்த சிறுமி பண்புடன் கூறியது உருக்கமாக இருந்தது.
படிக்கின்ற வயதில் முகநூல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புன்னகை முகத்தை பதிவிட்டு, மெசேஞ்ஜரில் நைசாக கைஅசைக்கும் கைபுள்ளைகளின் காதல் வலையில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சோக சம்பவம் மற்றொரு சாட்சியாகி இருக்கின்றது.