கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி செல்வமுருகன் உயிரிழந்த விவகாரத்தில், நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலைய ஆய்வாளர் ஆறுமுகம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
காடாம்புலியூரை சேர்ந்த செல்வமுருகனை கடந்த 30ஆம் தேதி திருட்டு வழக்கில் கைது செய்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர். அங்கு உடல்நலம் குன்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செல்வமுருகன் உயிரிழந்தார். ஆனால், கணவர் செல்வமுருகன் சாவில் சந்தேகம் உள்ளதாகக் குற்றம்சாட்டிய அவரது மனைவி பிரேமா, கஸ்டடியில் இருந்தபோது போலீசார் சித்திரவதை செய்ததே சாவுக்கு காரணம் என குற்றம்சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
செல்வமுருகன் அடைக்கப்பட்டிருந்த சிறையின் காவலர்கள், அங்கிருந்த கைதிகள் மற்றும் சிகிச்சை அளித்த டாக்டர், நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் ஆகியோரிடம் விருதாச்சலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்டிரேட் ஆனந்த் மற்றும் சிபிசிஐடி போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில், கடலூர் எஸ்.பி. ஸ்ரீஅபினவ், நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலைய ஆய்வாளரும், செல்வமுருகன் கைது செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியுமான ஆறுமுகத்தை கடலூர் துறைமுகம் காவல்நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளார்.