அ.இ.த.வி.ம.இ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனுக்கு மதுரை விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விஜய் இருக்கும் மக்கள் இயக்கமே தங்கள் சுவாசம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
1984 ல் நடிகர் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய போதே அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வைத்தவர் எஸ்.ஏ. சந்திரசேகரன்...! ஆனால் இன்று அரசியலுக்கு அழைத்தார் என்பதற்காக தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரனுக்கும் மகன் விஜய்க்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம் தன்னிடம் தான் உள்ளது என்று கூறிவரும் எஸ்.ஏ சந்திரசேகரன், விஜய்யை பிரபல நடிகனாக்குவதற்காக பியூன் வேலை எல்லாம் பார்த்துள்ளேன் என்றும் தற்போது உயர்ந்து விட்ட பின்னர் மக்கள் இயக்க பொறுப்பில் உள்ள புஸ்ஸி ஆனந்து என்பவரின் பேச்சை கேட்டுக் கொண்டு விஜய் செயல்படுவதாகவும் , அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை எஸ்.ஏ. சந்திரசேகரன் தெரிவித்து வருகின்றார்.
ஆனால் அ.இ.த.வி.ம.இ கட்சி தொடங்கிய சிறிது நேரத்தில் விஜய் தரப்பில் இருந்து கையெழுத்திடாத மறுப்பு அறிக்கை வந்ததே தவிர ஒருவர் கூட எஸ்.ஏ. சந்திர சேகரனுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. நாளுக்கு நாள் விஜய்யின் இமேஜை டேமேஜ் ஆக்கும் வகையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடந்து பேட்டி அளித்து வரும் நிலையில் எஸ்.ஏ.சியை பாசத்துடன் அப்பா என்றழைத்து வந்த மதுரை ரசிகர்கள் முதன் முதலாக எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளனர்.
மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள நடராஜா தியேட்டரின் உள்ளே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் மாவட்ட தலைவர் கல்லானை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் அனைவரும் விஜய் நேரடியாக தலையிடும் மக்கள் இயக்கத்தை தவிர வேற எதிலும் சேர வேண்டாம் என்றும், வேறு எதிலும் சேர்ந்தால் தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அதாவது எஸ்.ஏ.சி தொடங்கியுள்ள அ.இ.த.வி.ம.இ கட்சிக்கு, விஜய் ரசிகர்கள் எவராது சென்றால் தலைமையிடம் போட்டுக் கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்திய விஜய் மக்கள் இயக்கத்தினரை அங்கிருந்து கலைந்து போக செய்த போலீசார், முககவசம் அணியாமல், ஊரடங்கை மீறி கூட்டம் நடத்தி நோய் பரவுதலுக்கு வழி வகுத்ததாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தனது மகன் விஜய் தான் அரசியல் இயக்கத்திற்கு ஒத்துழைக்கவில்லை, அவரது ரசிகர்களை வைத்தாவது கட்சியை நடத்திவிடலாம் என்று எஸ்.ஏ.சி கண்ட அரசியல் கனவிலும் தற்போது கல் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.