சென்னையில் தன்னிடம் இருந்த பணத்தையும் நகைகளையும் காதலிக்கு கொடுத்த இரும்பு வியாபாரி, மனைவியிடம் கணக்கு சொல்வதற்காக கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த அமர்நாத், இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4ஆம் தேதி மனைவியை போனில் அழைத்தவர், வியாபார விஷயமாக பேச வேண்டும் என தன்னை அண்ணாநகர் வரவழைத்த சிலர், காரில் கடத்தி தாக்கி, 2 லட்ச ரூபாய் பணம், 2 தங்க மோதிரங்கள் மற்றும் காரையும் பறித்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்
அத்துடன் தனது செல்போனைப் பிடுங்கி போன் பேங்கிங் வழியே வங்கிக்கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு தன்னை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியிருக்கிறார் அமர்நாத்.
அமர்நாத் வீடு வந்து சேர்வதற்குள் அவர் கூறிய கதைகளை அப்படியே போலீசில் கூறி புகாரளித்திருக்கிறார் அவரது மனைவி. உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீசார், அமர்நாத் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் அமர்நாத் ஒரு காரில் தாமே ஏறிச் செல்வது தெரியவந்தது. தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் கங்கா என்ற பெண்ணுக்கு பணத்தை பரிமாற்றம் செய்திருப்பதும் தெரியவந்தது.
அமர்நாத் கடத்தப்பட்டதாகக் கூறிய காரில் அன்றைய தினம், கனகா, பிரபு, விக்னேஷ் என மூன்று பேர் இருந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில் நடந்தது திட்டமிட்ட ஒரு நாடகம் என்பது அம்பலமானது. கனகா கொடுத்த வாக்குமூலத்தில், அமர்நாத்துடன் தவறான உறவில் இருந்து வந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு அமர்நாத்திடம் 6 சவரன் தங்க நகையை கொடுத்ததாகவும், அதை திருப்பி தராமல் அவர் அலைகழித்ததாகவும் கூறியுள்ளார்.
தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வாங்கிய நகையை கொடுக்கமுடியவில்லை என்று கூறிய அமர்நாத், அன்றைய தினம், தன்னிடமிருந்த மோதிரம், பணம், வங்கி இருப்பு என உள்ளிட்டவற்றை கொடுத்ததாகவும் கனகா கூறியுள்ளார். இத்தனையையும் கொடுத்துவிட்டு, மனைவியிடம் எப்படி கணக்கு காட்டுவது என யோசித்த அமர்நாத், இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அமர்நாத் மீது வழக்கு எதுவும் பதியாமல் எச்சரித்து அனுப்பியுள்ளனர் போலீசார்.