ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 லட்சம் ரூபாயை மூன்றே மாதத்தில் 5 கோடி ரூபாயாக மாற்றித்தருவதாக கூறி பக்தர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த சாந்தா சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சக்தி பெருகுவதற்கு ரைஸ் புல்லிங் கலசம் வாங்க பக்தர்களுக்கு லட்டு கொடுத்த சாமியாருக்கு மொட்டை போட்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியில் தனது சக்தியை பெருக்குவதற்காக ரைஸ் புல்லிங்கை நம்பிய சர்வமங்கள பீடத்தின் பீடாதிபதி சாந்தகுமார் என்கிற சாந்தா சாமிகள் இவர் தான்..!
தனது சர்வமங்கள பீடத்திற்கு வரும் பக்தர்களிடம் தனக்கு அதிசய சக்தி கிடைத்திருப்பதாகவும், பெங்களூரில் உள்ள முக்கிய புள்ளி கமலகார ரெட்டி என்பவருடன் இணைந்து தொழில் செய்வதன் மூலம் மாதம் லட்சக்கணக்கில் வருவாய் வருவதாகவும் கதை அளந்த சாந்தா சாமியார், 10 லட்சம் ரூபாயை தன்னிடம் கொடுத்தால் அதனை 3 மாதத்தில் 5 கோடி ரூபாயாக மாற்றக்கூடிய சக்தி தன்னிடம் உள்ளது என்று ஆசைவார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.
இவரது தேன் தடவிய வார்த்தைகளுக்கு மயங்கிய வாலாஜாபேட்டை பொதிகை நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் தோல் தொழிற்சாலை மேலாளரும் பக்தருமான கேசவமூர்த்தி என்பவர் 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். தான் மட்டும் இல்லாமல் தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்கள் என பலரிடமிருந்தும் பணத்தை பெற்று மொத்தம் 45 லட்சம் ரூபாய் வரை சாந்தா சாமியாரை நம்பி கொடுத்துள்ளார்..!
4 வருடங்களாக எந்த பணத்தையும் திருப்பி அளிக்காத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு பள்ளி ஆசிரியரான புனிதவல்லி என்பவர் மூலம் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கேசவமூர்த்தியிடம் சாந்தா சாமி வழங்கியுள்ளார். வங்கியில் போட்ட பின்னர் தான் தெரிந்தது சாமியார் போல அவர் கொடுத்த காசோலையும் டம்மி என்று..!
இது சம்பந்தமாக சாந்தா சாமியிடம் கேட்டபோது தன்னை மீறி செயல்பட்டால் தன்னுடைய தவவலிமையால் சூனியம் வைத்து கைகால்களை செயல் இழக்க வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். சாமியாருக்கு கொடுத்த பணம் கடலில் கரைத்த பெருங்காயம் என்பதை தாமதமாக புரிந்து கொண்ட கேசவமூர்த்தி, இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் ஆற்காடு பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரிடம் 10 லட்ச ரூபாய், பென்ஸ் பாண்டியன் என்பவரிடம் 10 லட்ச ரூபாய் என சாந்தா சாமிகளின் மோசடி லீலைகள் தொடர்ந்துள்ளன.
இதனையடுத்து ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி தலைமையிலான போலீசார், வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியிலுள்ள சர்வமங்கள பீடத்தில் இருந்து சாந்தா சாமியை கொத்தாக தூக்கிச்சென்று பணம் எங்குள்ளது என்று விசாரித்தனர்.
பணத்தை பெற்றுக் கொண்டு பக்தர்களுக்கு லட்டு கொடுத்த சாந்தா சாமிக்கு , பெங்களூரை சேர்ந்த கமலகாரர் ரெட்டி என்பவர் சக்தியை பெருக்குவதற்காக இரிடியத்திலான ரைஸ்புல்லிங் கலசம் தருவதாக ஏமாற்றி சாமிகளிடம் இருந்து மொத்த பணத்தையும் மொட்டை போட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 420 உள்ளிட்ட 3 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சாந்தா சாமிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் மோசடிக்கு உடந்தையாக இருந்த கமலகாரர் ரெட்டி, அரசுப் பள்ளி ஆசிரியை புனிதவல்லி ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
ஆன்மீகத்தை நேசிப்பவர்களை இழிவுபடுத்தும் விதமாக பீடம் அமைத்து பக்தர்களின் லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்த சாந்தாசாமிகள், தனக்கு ரைஸ்புல்லிங் கலசத்தால் அதீத சக்தி கிடைக்கும் என்ற நம்பியிருந்த நிலையில் காவல்துறையினரால் அவருக்கு ஜெயில் கிடைத்திருக்கிறது.