சென்னையில் வங்கிக்கு சென்று வந்த 76 வயது மூதாட்டியிடம் இருந்து பணத்தை பறித்து விட்டு அருகில் உள்ள வீட்டின் அறையில் பதுங்கிய கொள்ளைக்கார பெண்ணை, பக்கத்து வீட்டுப் பெண் அரிவாள் முனையில் போலீஸில் பிடித்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் மாகலிங்கபுரம் சரஸ்வதி தெருவில் வசித்து வருபவர் மீனாட்சி. 76 வயதான இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். ஒரே மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் பணியாற்றி வருகிறார். 20 ஆண்டுகளாக தனிமையில் உள்ள மூதாட்டி மீனாட்சி, பணத் தேவைக்காக அருகில் உள்ள வங்கியில் பணம் எடுக்க சென்றுள்ளார்.
வங்கியில் 50 ஆயிரம் பணம் எடுத்து கொண்டு, தனியாக நடந்து வீட்டிற்கு வந்த மூதாட்டியை, வங்கியிலிருந்தே நோட்டமிட்ட இளம் பெண் ஒருவர் அருகில் வந்து கவனத்தை திசை திருப்புவது போல் பேசியுள்ளார். மூதாட்டியை பின் தொடர்ந்து வந்த அந்த பெண்ணிடம் பேச்சு கொடுக்காமல் வீட்டிற்கு வந்த மூதாட்டியை, கீழே தள்ளி தாக்கி விட்டு கையில் இருந்த 50 ஆயிரம் பண பையை பறித்து கொண்டு அந்த பெண் தப்பியோடியுள்ளார்.
மூதாட்டியின் சப்தம் கேட்டு, எதிர் வீட்டில் இருப்பவர்கள் ஓடி வந்ததால், கொள்ளைக்கார பெண் பக்கத்து வீட்டு தடுப்புச் சுவரில் ஏறி குதித்த போது காலில் அடிபட்டதால், அவரால் தப்பியோட முடியவில்லை. உடனே பக்கத்து வீட்டில் உள்ளே நுழைந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை மிரட்டி வெளியில் துரத்திவிட்டு கதவை பூட்டி கொண்டார். ஒரு பக்கம் மூதாட்டியின் அலறல் சத்தம், வீட்டிற்கு வெளியே தனது குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பக்கத்துவீட்டு பெண், வெளியில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு வீட்டில் நுழைந்தார்.
தனது வீட்டிற்குள் மூதாட்டியின் பணத்துடன் நின்றிருந்த கொள்ளைக்கார பெண்ணை அரிவாள் முனையில் பிடித்து வெளியில் இழுத்து வந்தார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கொள்ளைக்கார பெண்ணை வளைத்து பிடித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர்.
இதனையடுத்து அந்த பெண்ணை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ரெஜினா பானு என்பதும், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
பின்னர் மூதாட்டி மீனாட்சியிடம் இனிமேல் தனியாக வெளியில் செல்ல வேண்டாம் என்றும், எந்த பொருள் வாங்க வேண்டும் என்றாலும், காவல்துறையை தொடர்பு கொண்டால், நேரடியாக வாங்கி தருவதாக கூறி காவல்நிலையம் தொடர்பு எண்ணை நுங்கம்பாக்கம் போலீசார் வழங்கி உள்ளனர்.
கீழே தள்ளிய பிறகும் பதற்றமடையாமல், உதவி குரல் எழுப்பிய மூதாட்டியையும், அரிவாள் முனையில் கொள்ளைக்கார பெண்ணை பிடித்துக் கொடுத்த பக்கத்து வீட்டு பெண்ணையும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.
தனியாக வசிக்கும் முதியவர்கள் எந்த உதவி தேவை என்றாலும் காவல் துறைக்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் எனவும், அதே சமயத்தில் அத்தியாவசிய தேவைக்காக முதியவர்கள் வெளியில் செல்ல நேர்ந்தால் உதவி செய்வது போல் வரும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.