நெல்லை ஓட்டலில் ஷட்டரைப் பூட்டி வழக்கறிஞருக்கு தர்மஅடி கொடுக்கப்பட்ட விவகாரம் வணிகர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களுக்கிடையே கருத்து மோதலாக உருவாகியுள்ளது.
நெல்லையில் மதுரம் என்ற தனியார் ஓட்டல் மீது 90க்கும் மேற்பட்ட சேவை குறைபாடு வழக்குகள் போட்டுத் தொல்லை கொடுத்ததாக, வழக்கறிஞர் பிரம்மா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் ஹரிஹரன், மணிசங்கர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஓட்டல் ஊழியரை, வழக்கறிஞர் பிரம்மா தாக்கியதாக அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா மற்றும் வணிகர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்து வைத்தனர்.
வழக்கறிஞர் என்ற போர்வையில் பிரம்மா, வழக்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மிரட்டி வசூலித்ததாகவும், ஏராளமானோர் அவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது சகோதரி மற்றும் நண்பர்கள் மூலம் வழக்குப் போட்ட ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.
வழக்கறிஞர் மீதான வணிகர் சங்கத்தினரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக நெல்லை வழக்கறிஞர் சங்கத்தின் பொதுக்குழுவில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வணிகர்கள் செய்யும் சட்டவிரோதச் செயலை தட்டிக்கேட்க எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போட முடியும் என்றும், ஒரு மன்னிப்புக் கேட்டிருந்தால் கூட விட்டிருப்போம் என்றும் குறிப்பிட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் சிவ சூரிய நாராயணன், இந்த தாக்குதல் சம்பவத்தை வணிகர் சங்கமே ஆதரிப்பது சரியான அணுகுமுறையாகாது என்றும் வணிகர் சங்கத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் களமிறங்கும் என்று எச்சரித்தார்
வணிகர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தனிப்பட்ட ஒருவரது வழக்கை சங்க ரீதியாக அணுகுவதால் கருத்து மோதல் வலுத்து வருவது குறிப்பிடதக்கது.