சென்னை கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட மணற்பாங்கான பகுதியில், மழைநீர் வடிகால் கட்டுவதற்கு 376 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பது வீண் செலவு என அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கத்தால் எல்லைப் பகுதி கிழக்கு கடற்கரைச் சாலையில் உத்தண்டி வரை நீண்டுள்ளது.
இப்பகுதி மணற்பாங்கான பகுதி என்பதால் மழை பெய்தாலும் மழை நீர் தேங்காது, முழுவதுமாக பூமி உறிஞ்சி விடும் என்பதால் 20 அடியிலேயே நல்ல தண்ணீர் கிடைத்து விடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளான சோழிங்கநல்லூர், பெருங்குடி ஆலந்தூர் மண்டலங்களில் மழைநீர் வடிகால் அமைக்கத் திட்டமிடப்பட்டு ஜெர்மனி வங்கிக் கடன் உதவியுடன் 326 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1,250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அதில் ஒருபகுதியாக தற்போது கிழக்கு கடற்கரைச் சாலை கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை 52 கிலோ மீட்டருக்கு 376 கோடி ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
பனையூர், நயினார் குப்பம், டிவிஎஸ் அவென்யூ உள்ளிட்ட சில பகுதிகளில் முதற்கட்டமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆனால் மழைநீரே தேங்காத இந்த கடற்கரை மணல் பரப்பிற்கு எதற்காக இத்தனை கோடிகளில் மழைநீர் வடிகால் எதற்கு என்று கேள்வி எழுப்பும் இப்பகுதி மக்கள், இத்திட்டம் தேவையில்லை என கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தினர்
புயல்-தொடர்மழை, 2015 கடும் வெள்ளம் போன்ற நேரங்களில்கூட தங்கள் பகுதியில் எந்த சேதமும் ஏற்பட்டதில்லை என்றும், ஒரே நாளில் மழைநீர் பூமிக்குள் இறங்கி விடும் என்றும், மணற்பாங்கான பகுதியான இங்குள்ள நல்ல நீரை இப்படியே தங்கள் வருங்கால சந்ததிக்கு விட்டுச் செல்ல விரும்புவதாகவும் கூறுகிறார் 72 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் பெரியவர் ஒருவர்.
மழைநீர் வடிகால்கள் மூலம் நீர் சேமிக்கப்படாமல், முதலில் கழிவு நீரோடும் முடிவில் கடலோடும் வீணாகக் கலப்பதால், நிலத்தடியில் கடல் நீர் உட்புகும் அபாயமும் உள்ளதாக இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் தாழ்வான பகுதிகளான வேளச்சேரி பள்ளிக்கரணை வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக இத்திட்டத்தை பயன்படுத்தலாமே என்கின்றனர்
இங்கு வடிகால் அமைக்கத் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் திருடப்படுவதாகவும், மணலை அள்ளுவதற்காகவே இந்த திட்டத்தை நிறைவேற்றத் துடிப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்
அண்டை மாநிலமான தெலுங்கானாவில் பெய்தது போல திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டால் அவற்றையெல்லாம் சமாளிக்கும் பொருட்டு எதிர்கால நோக்கத்திற்காக முன்கூட்டியே திட்டமிட்டு மழைநீர் வடிகால் இவ்விடத்தில் கட்டப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள்,
மக்களுக்கு பயனில்லாத தேவையற்ற எந்த திட்டத்தையும் செய்யவில்லை என்றும் இதனுடைய பயன் புரியாமல் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தற்போது பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சென்னை மாநகர ஆணையர் உத்தரவு கொடுத்த பின்பு பணிகள் மீண்டும் தொடங்கப்படும் எனவும் கூறினர்.