தூத்துக்குடி மாவட்டம் தளவாய் புரத்தில், 1405 ஏக்கர் நிலத்திற்கு போலிப் பத்திரம் தயாரித்ததோடு, ஜமீன் சொத்து எனக் கூறி பெண் கிராம நிர்வாக அதிகாரியிடம் பட்டாவுக்கு ஒப்புதல் பெற வந்த கேரள சேட்டன்களையும் அழைத்து வந்த புரோக்கர்களையும் (சிங்கம் பட பாணியில்) பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிங்கம் படத்தில் கிராமத்திற்குள் படைபலத்துடன் காரில் நுழையும் வில்லன் குழுவை, கிராமத்து மக்கள் துணையுடன் நாயகன் சூர்யா தெறிக்க விடுவார். அதே போன்ற பரபரப்பான சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது.
தளவாய்புரம் கிராம நிர்வாக அதிகாரியாக இருக்கும் ராதா என்பவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் இங்கு பணிக்கு வந்துள்ளார். தனது அலுவலகத்தில் அவர் இருந்தபோது, தெலுங்குப் பட வில்லன்கள் போல இரண்டு கார்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் உள்ளே புகுந்துள்ளது.
அந்த கிராமத்தில் உள்ள 1405 ஏக்கர் நிலத்தை தாங்கள் விலைக்கு வாங்கி உள்ளதாகவும், அதற்கு பட்டா வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று, தங்களுடன் அழைத்து வந்த புரோக்கர்கள் மூலம் கிராம நிர்வாக அதிகாரி ராதாவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இரண்டு கார்களின் வில்லங்கமான சிலர் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து ஆவேசமான தளவாய்புரம் கிராமத்து மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் அதிரடியாகப் புகுந்து அந்த கும்பலை சுற்றிவளைத்தனர்.
ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு செந்தில் ஆறுமுகம் என்ற நபர் தளவாய்புரத்தில் உள்ள வயல்கள், வீடு என 200க்கும் மேற்பட்ட சர்வே நம்பர்கள் கொண்ட 1405 ஏக்கர் நிலம் ஜமீன் சொத்து என போலியாக பத்திரம் தயாரித்து விளாத்திகுளத்தில் பத்திரப்பதிவு செய்திருந்த நிலையில், அது போலி என கிராம மக்கள் நிரூபித்ததால் 2019 ஆம் ஆண்டு அந்த பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த போலியான பத்திரத்துக்கு பட்டா பெறும் திட்டத்துடன் கேரள சேட்டன்கள் வந்திருப்பது தெரியவந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கார்களைப் பஞ்சராக்கி அடித்து நொறுக்கத் தயாராயினர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மக்களை அமைதிப்படுத்தி வந்திருந்த கும்பலிடம் விசாரணை நடத்தினர்.
குங்குமப் பொட்டு புரோக்கர் ஒருவர் தன்னை ஒரு நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ள முயல ஊர் மக்கள் போட்ட சத்தத்தில் அடங்கி ஒடுங்கிப்போனார்.
போலீசார் அவர்களை விசாரணைக்கு அழைத்து செல்ல முயல, ஊர் மக்கள் அங்கேயே வைத்து விசாரிக்கத் தொடங்கினர். தமிழ் தெரியாது என்று சமாளித்த கேரள சேட்டன்களுக்கு அவர்களது தாய் மொழியிலேயே நில அபகரிப்பு குறித்து போட்டி போட்டு எச்சரிக்கைப் பாடம் எடுத்தனர் உள்ளூர் மக்கள்..!
அவர்கள் 8 பேரையும் வரிசையாக நிறுத்தி பொதுமக்கள் வீடியோ எடுத்ததால் மிரண்டு போன அவர்கள் வெட்கப்பட்டு சுவரை நோக்கி முகத்தை திருப்பிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்றும், செந்தில் ஆறுமுகம் என்பவர் தான் தங்களை அனுப்பி வைத்தார் என்றும் ஊர் மக்களிடம் கெஞ்சிய கேரள சேட்டன்களிடம், தளவாய்புரம் ஊருக்குள் வந்து இந்த நிலம் தொடர்பான சர்வே நம்பரில் தலையிட மாட்டோம் என்று எழுதி கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கெத்துக்காட்டிய கிராம நிர்வாக அதிகாரி ராதா, இனிமேல் தளவாய்புரம் ஊருக்குள் நீங்கள் யாரும் வரக்கூடாது என்றும் மிரட்டலாகத் தெரிவித்தார்.
அடுத்த நொடியே சரணாகதி அடைந்த கேரள சேட்டன்கள் எழுதிக்கொடுத்துவிட்டு விட்டால் போதும் என்று கும்பிடு போட்டு புறப்பட்டு சென்றனர்.
ராதா போல கிராம நிர்வாக அதிகாரிகள் இருந்தால் நிலத்தை போலிப் பத்திரம் தயாரித்து பட்டா நிலம் என சுருட்டிப்போடும் நில அபகரிப்புக் கும்பல்களின் விஷபற்களை ஆரம்பத்திலேயே பிடுங்க முடியும் என்பதில் அய்யமில்லை..!