சென்னை தியாகராய நகரில் தங்க நகை மொத்த வியாபார கடை மற்றும் பட்டறையில் க்ரில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து லாக்கரில் இருந்த 10 கிலோவிற்கு அதிகமான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் மூசா தெருவில் ராசேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமான உத்தம் ஜூவல்லரி எனும் மொத்த வியாபார தங்க நகை கடை மற்றும் பட்டறை இயங்கி வருகிறது.
வீட்டின் ஒரு பகுதியில் கடையும், பட்டறையும் இயங்கி வந்த நிலையில், அதை அவருடைய மகன்கள் தருண் மற்றும் பரீஷ் ஆகியோர் கவனித்து வந்துள்ளனர்.
அங்கிருந்து சென்னையில் உள்ள பிரபல ஜூவல்லரி கடைகளுக்கு ஆர்டரின் பேரில் நகைகள் தயாரித்து அளித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடையின் க்ரில் கதவுகள் இன்று காலை திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மாம்பலம் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடம் வந்து மாம்பலம் போலீசாரும், தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் ஏ.ஜி.பாபு மற்றும் துணை ஆணையர் ஹரிகிரனும் விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடம் வந்து ஆய்வு நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் கடையின் க்ரில் கதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லாக்கரில் இருந்த வைரம் பதித்த தங்க நகை சுமார் 2 கிலோவும், தங்க நகைகள் 2 கிலோவும், சுமார் ஏழரை கிலோ தங்க கட்டிகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின்பேரில் வீட்டின் முன்புறம் மற்றும் கடையின் உள்ளே இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை கைபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையடித்து சென்ற நபர்களை பிடிக்க துணை ஆணையர்கள் 5 பேர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.