சென்னை எழும்பூரின் மையப் பகுதியான இந்த இடம் 1,800-களில் விளைநிலமாக இருந்தது. இந்த இடத்தை அருணகிரி முதலியார் என்பவர் விலைக்கு வாங்கி 1842-ம் ஆண்டு கட்டிய கட்டடத்தில் தான் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் இயங்கி வந்தது.
காவல் துறை நவீனமயமாக்கல் இடவசதி உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 2013ம் ஆண்டு வேப்பேரியில் புதிய காவல் ஆணையர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வந்தாலும், பழைய காவல் ஆணையர் அலுவலத்தில் காவல் துறையின் சில அலுவலக செயல்பாடுகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், 178 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டடத்தை இடிக்காமல், அதை புனரமைத்து 36 ஆயிரம் சதுர அடியில், தமிழக காவல்துறையின் சிறப்பையும் வளர்ச்சியையும் சொல்லும் வகையிலான அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். காவல் துறைக்கான நிதியில் இருந்து முதற்கட்டமாக 4 கோடி ரூபாயை டிஜிபி திரிபாதி ஒதுக்கியதை அடுத்து, கட்டடத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 178 வருட பழமையான கட்டிடம் என்பதால் அப்போது பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்ட பொருட்களை கலந்து புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்த காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடர்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதிமுக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேய காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்கக் கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்தித் தொகுப்புகள், வயர்லெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருள்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
தமிழக காவல்துறையில் வீர தீரச் செயல்களில் ஈடுபட்டு உயிரிழந்த காவல் அதிகாரிகள், காவலர்களின் பெயர்களும் அருங்காட்சியகத்தில் ஒரு சுவரில் பொறிக்கப்படுகிறது. முப்படைகளிடம் இருந்து பல முக்கிய பொருட்களை சேகரித்து வைத்து இந்தியாவில் உள்ள அனைத்து காவல் துறைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அருங்காட்சியகம் அமையவிருப்பதாக காவல் துறையினர் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.