மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தேசதுரோகம் என்று தெரிந்தும், பெருந்தன்மையோடு விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உதவியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரனின் நேரடி வீடியோ மூலம் எம்.ஜி. ஆர் - பிரபாகரன் இடையிலான பாசப்பிணைப்பு குறித்த உண்மையை விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரனும் தானும் பல ஆண்டுகள் நெருங்கி பழகிய தோழர்கள் போல மேடைகளில் அவருடனான மலரும் நினைவுகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்வது வழக்கம். அந்தவகையில் பிரபாகரனை மட்டும் தனியாக அழைத்துச் சென்று நிறைய பணம் வைத்திருந்த அலமாரியை எம்.ஜி.ஆர் திறந்துவிட்ட கதையை கடந்த ஆண்டு சீமான் சுவாரஸ்யமாக தம்பிகளுக்கு தெரிவித்தார்.
இந்த கதைக்கு விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் இறப்பதற்கு முன்பு சொன்னவிளக்கம் என்ன தெரியுமா ? அன்றன் பால்சிங்கம், சங்கர், பேபி சுப்பிரமணியம் ஆகியோருடன் தான் எம்.ஜி.ஆரை சந்தித்து 2 கோடி ரூபாய் உதவி கேட்டதாகவும், மறு நாளே எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து அந்த பண உதவியை தாங்கள் பெற்று வந்ததாகவும் கூறியுள்ளார் பிரபாகரன்.
அது போல சனிக்கிழமை தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்ச்சியில் சீமான் சொன்ன கதை சற்று வியப்பூட்டுவதாக இருந்தது. பிரபாகரன் இந்திய ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்ட போது , அவர் கஷ்டப்படுவதை அறிந்து கேட்காமலேயே, எம்.ஜிஆர் 36 லட்சம் ரூபாயை கிட்டுவை அழைத்து கொடுத்து உதவியதாகவும், தேசத்துரோகம் என்று தெரிந்தே பெருந்தன்மையோடு உதவி செய்ததாகவும் பிரபாகரன் தன்னிடம் கூறியதாக சீமான் புதிய கதை ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
உண்மையில், இந்திய ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருந்த அன்றைய கால கட்டத்தில் இக்கட்டான நிலையில் இருப்பதாக கிட்டுவை அனுப்பி எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டதாகவும், அவர் தனக்கு பெரிய தொகையை கொடுத்து அனுப்பியதாகவும் தெரிவித்த பிரபாகரன் இதனை தேசதுரோகம் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை
தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்கம் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் 1991 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக தடை செய்யப்பட்டது. அதற்கு முன்பாக விடுதலை புலிகள் இயக்கத்திற்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான உதவிகள் கிடைத்தது. அதுவரை எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் எம்.ஜி.ஆரின் உதவியை தேசதுரோகம் என்று பிரபாகரன் கூறியிருக்க வாய்ப்பில்லை என்பதே தமிழ் தேசியவாதிகளின் ஆதங்கமாக உள்ளது.