கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர், பேருந்தில் அருகில் எவரும் அமர்ந்து விடாதவாறு முன் எச்சரிக்கையுடன் இருக்கையில் மர ஸ்டூலை வைத்துக் கொண்டு பயணித்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவித்தார். உணவக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட அதிரடி சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கடலூர் பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரான சந்திரசேகர சாகமூரி திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு கையில் முககவசத்தை கொடுத்து கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பயணிகள் நடைபாதையை ஆக்கிரமித்து உணவக உரிமையாளர்கள் புரோட்டோ கடை நடத்திக் கொண்டிருப்பதை கண்ட கலெக்டர் , கடை நடத்துவோரை எச்சரித்தார், உடனடியாக அவர்கள் அதனை அங்கிருந்து அகற்ற முயல, கவலை வேண்டாம் நம்மாளுங்க எடுத்து சென்று விடுவார்கள் என்று கூறி அவற்றை அங்கிருந்து அலேக்கா தூக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பிரியாணி அண்டாவையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து அங்கு புறப்பட தயாராக இருந்த அரசு பேருந்துகளில் ஏறி சமூக இடைவெளி பின்பற்ற படுகின்றதா என்று ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், அங்குள்ள இருக்கையில் முககவசம் அணிந்தபடி அமர்ந்திருந்த பெண் ஒருவர் தனக்கு அருகில் மர ஸ்டூல் ஒன்றை வைத்திருப்பதை கண்டார். அவரிடம் விசாரித்த போது கொரோனா காலம் என்பதால் அருகில் வேறு நபர்கள் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இதனை வீட்டில் இருந்து கையோடு எடுத்து வந்ததாக தெரிவித்தார்.
இது போல அனைவரும் ஏதாவது ஒரு பொருளை கையோடு கொண்டு வந்து சமூக இடைவெளியுடன் பயணித்தால் கொரோனா பரவலை தடுக்கலாம் என்று அந்த பெண்ணை பாராட்டினார்.
அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களை சந்தித்த கலெக்டர், ஆட்டோவில் ஒருவரை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
கொரோனாவுக்கு பின்னர் பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாக இருப்பதாக சில ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்த நிலையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று முறைவைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சவாரியை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது பேருந்து நிலைய வளாகத்திற்குள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகளின் வாகனத்தை மாற்று இடத்தில் நிறுத்தவும், பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு தேவையான இடவசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்ட ஆட்சி தலைவரின் அரைமணிநேர ஆய்வில் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டது. இதனை போலவே தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தங்கள் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களுக்கு வாரம் ஒரு முறையாவது சென்று ஆய்வு மேற்கொண்டால் கீழ் நிலை அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதை தவிர்ப்பார்கள் அதே நேரத்தில் பேருந்து நிலைய வளாகங்கள் சுகாதாரமடையவும் வழிபிறக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.