கிருஷ்ணகிரியை சேர்ந்த முகநூல் காதலனுடன் சேர்த்துவைப்பதாக கூறி கேரள மாணவியை காரில் அழைத்துச்சென்ற ஆண் நண்பர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்து ஓசூர் பேருந்து நிலையத்தில் நிர்கதியாக விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தரணி. 22 வயதான தரணி, முகநூலில் அறிமுகமான கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியுடன் பழகியுள்ளார் முப்பொழுதும் முகநூல் சாட்டிங்கில் மூழ்கிய தரணி, அந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.
அந்த மாணவியும் தரணியுடன் முகநூலில் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் நேரில் சந்திக்கும் ஆவலுடன் இருந்துள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவருக்கு கோழிக்கோடு அடுத்த மணாசேரியை சேர்ந்த விபின்ராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அவரும் மாணவி மீது காதல் வயப்பட்டு காதலை தெரிவித்துள்ளார்.
அதற்கு தான் ஏற்கனவே காதலில் விழுந்து விட்டதாகவும் , தனது முகநூல் காதலன் தரணி குறித்தும் விபின்ராஜிடம் தெரிவித்த மாணவி, நாம் நண்பர்களாகவே இருப்போம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவ்வப்போது விபின்ராஜ் மாணவியிடம் பேசி வந்த நிலையில் தான் கிருஷ்ணகிரியில் உள்ள காதலன் தரணியை சந்திக்க செல்வதாக கூறியுள்ளார். தானே காரில் சென்று விடுவதாக நம்பிக்கையூட்டிய விபின்ராஜ் , கடந்த 2ந்தேதி முக்கம் பகுதியில் இருந்து மாணவியுடன் காரில் புறப்பட்டுள்ளான். வழியில் தனது கூட்டாளிகளான அகித்ராஜ், ஜோபின் ஆகிய இருவரை காரில் ஏற்றிக் கொண்டுள்ளான்.
நள்ளிரவு நேரம் காரில் மாணவி தூங்கிக் கொண்டிருந்த போது சாலையோரம் மறைவான இடத்தில் காரை நிறுத்தி விபின்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் சேந்த அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் காயங்களுடன் மாணவியை ஓசூர் பேருந்து நிலையத்தில் அனாதையாக இறக்கிவிட்டு சென்றுள்ளனர். அந்த பலாத்கார கும்பல். காதலனை சந்திக்க வந்த இடத்தில் ஆண் நண்பர்களால் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது காதலனுக்கு செல்போனில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த முக நூல் காதலன் தரணி, இது தொடர்பாக புகார் ஏதும் தெரிவிக்காமல், தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று வாழ்க்கை கொடுப்பதாக ஆறுதல் கூறி அங்கு வைத்து அவனும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.
இதற்கிடையே மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் முக்கம் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாணவி பயன்படுத்திய செல்போனின், சிக்னலை வைத்து கிருஷ்ணகிரியில் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார் அந்த மாணவியை மீட்டதோடு, முக நூலில் பழகி மைனர் பெண்ணின் மனதை கெடுத்து வாழ்க்கை சீரழிவிற்கு காரணமான காதலன் தரணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
தன்னை காரில் அழைத்துச் சென்ற 3 பேர் பலாத்காரம் செய்ததாக மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளத்தை சேர்ந்த ஆண் நண்பர்கள் விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தாங்களாகவே விரும்பி காதல் வயப்பட்டாலும், அவர்களை பாதிக்கப் பட்டவர்களாகவே பார்க்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் உள்ளதால் காதலன் தரணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த காவல் துறையினர், பெற்றோர், செல்போனும் கையுமாக சுற்றும் தங்கள் பிள்ளைகளை முறையாக கண்காணிக்க தவறினால் இது போன்ற விபரீதங்கள் நிகழ காரணமாகிவிடும் என்கின்றனர்.
அதே நேரத்தில் படிக்கின்ற வயதில் முகநூலில் மூழ்கியதால், காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து நிற்கும் இந்த பள்ளி மாணவி சாட்டிங்கில் மூழ்கும் இளசுகளுக்கு எச்சரிக்கை பாடம்..!