திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் பெண்ணைக் காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுச் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையைச் சேர்ந்த இசக்கிப்பாண்டி என்பவரின் மகன் இசக்கித்துரை. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலிப்பதில் 17 வயதான இசக்கித்துரைக்கும் அவனது நண்பர்கள் இருவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மூவரும் இருசக்கர வாகனத்தில் கல்லிடைக்குறிச்சிக்குச் சென்று தாமிரபரணி ஆற்றங்கரையில் மது அருந்தியபோது அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது இருவரும் தாக்கியதில் இசக்கித்துரை உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உடலை அங்கே போட்டுவிட்டு இருவரும் போதையில் வந்ததால் கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் அவர்களின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
பேருந்தில் ஏறித் திருநெல்வேலிக்கு வந்த இருவரும் இசக்கித்துரையைக் காணாமல் பெற்றோர் தேடியபோது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாதபடி அவர்களுடன் சேர்ந்து தேடியுள்ளனர். இது தொடர்பான புகாரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரித்த போது சிறார் இருவரும் இசக்கித்துரையை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரித்ததில் இசக்கித்துரையை அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் அழைத்துச் சென்று கல்லிடைக்குறிச்சியில் ஆற்றங்கரையில் கிடந்த இசக்கித் துரையின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறார் இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சிறார்களுக்குள் ஏற்பட்ட பருவக் காதல் மோகத்தால் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.