ஃபேஸ்புக்கில் வரும் புடவைகள், நகைகள் குறித்த விளம்பரங்களை அதிகளவில் பார்வையிட்ட 800 பெண்களின் செல்போன் எண்களை வாட்ஸ்அப் குழுவில் இணைத்து, அதிக விலையுள்ள சேலையை குறைந்த விலைக்கு தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இந்திரா பிரகாஷ் என்பவர், ஃபேஸ்புக்கில் வந்த ஆடைகள் குறித்த விளம்பரங்களுக்குள் சென்று தனக்குப் பிடித்த ஆடைகளை பார்வையிட்டுள்ளார். சிறிது நேரத்தில் SALE என்ற வாட்சப் குழுவில் அவருடைய எண் இணைக்கப்பட்டு, ரக ரகமான ஏராளமான ஆடைகள் குறித்த விளம்பரங்கள் வந்துள்ளன.
குழுவின் அட்மினான தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற நபர், தன்னிடம் வளையல்கள், துணிகள் குறைந்த விலையில் கிடைப்பதாகவும், UPI மூலம் பணம் செலுத்தினால் வீட்டிற்கு கொரியர் மூலம் அனுப்பப்படும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருந்ததால் இந்திரா பிரகாஷும் நம்பிக்கையோடு தனக்குப் பிடித்த ஆடையைத் தேர்ந்தெடுத்து, அதற்கான பணத்தை செலுத்தியுள்ளார்.
ஆனால் பணம் செலுத்திய சிறிது நேரத்தில் தனது எண் அந்தக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் அதிலுள்ள அட்மின் எண்ணுக்கு அழைத்தால் இணைப்பு கிடைக்கவில்லை என்றும் கூறி, சைபர் கிரைம் போலீசில் இந்திரா பிரகாஷ் புகாரளித்துள்ளார். அதன்படி விசாரணையில் இறங்கிய போலீசார், ராஜேந்திரனை கைது செய்தனர்.
கூகுளில் இருந்தும் மீஷோ போன்ற செயலிகளில் இருந்தும் சேலைகள் மற்றும் வளையல்களின் புகைப்படங்ளை பதிவிறக்கம் செய்து ராஜேந்திரன் தனியாக விளம்பரம் கொடுத்தது தெரியவந்துள்ளது. அவனுடைய விளம்பரங்களை நம்பி வெளிமாநில பெண்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட பெண்கள் 1000 ரூபாய் முதல் ராஜேந்திரனின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
பணம் அனுப்பிய சில மணி நேரங்களில், அந்த பெண்களின் எண்களை ராஜேந்திரன் BLOCK செய்து விடுகிறான். அனுமதியின்றி தங்களுடைய செல்போன் எண்ணை குழுவில் இணைத்தது ஏன் என கேள்வி கேட்கும் பெண்களின் எண்களையும் உடனடியாக பிளாக் செய்துவிடுவான் என்கின்றனர் போலீசார். இதுவரை அவனது மொபைலில் 700 பெண்களின் செல்போன் எண்கள் Block List - ல் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதலங்களில் தங்களுடைய செல்போன் எண்களை வெளிப்படையாக தெரியும் வண்ணம் பதிவிட்டிருக்கும் பெண்களே ராஜேந்திரன் போன்றோரின் இலக்கு என்று கூறும் போலீசார், செல்போன் எண் உட்பட அனைத்து விபரங்களையும் லாக் செய்து வைப்பதே சிறந்தது என்றும் அறிவுறுத்துகின்றனர்.