கோவையில் உரிய சிகிச்சை வழங்காமல் அடவாடியாக அதிக கட்டணம் வசூலித்த புகாரில் துடியலூர் ஸ்ரீலட்சுமி மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை அருகருகே தங்க வைத்து ஒரு நாளைக்கு 40ஆயிரம் ரூபாய் வரை அறைக்கட்டணம் மட்டுமே வசூலித்தது உறுதியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை துடியலூர் பகுதியில் உள்ள ஸ்ரீலட்சுமி தனியார் மருத்துவமனையில் 100 படுக்கைகள் அமைத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு, கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்ட மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கொரான சிகிச்சை அளிப்பதாக கூறி சாதாரண அறையில் அருகருகே தங்க வைத்து ஒரு நாளைக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் என 80 ஆயிரம் ரூபாய் அறை வாடகை மட்டும் என வசூல் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதேபோன்று, 70 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் மட்டுமே இருந்ததாகவும், ஒரே ஒரு முறை மட்டுமே மருத்துவர் வந்து பரிசோதிப்பதாகவும் அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் புகார் தெரிவித்தனர். கடந்த மாதம் சிங்காநல்லூரை சேர்ந்த செந்தில் என்பவர் கொரோனா பாதித்த தனது தந்தையை ஸ்ரீலட்சுமி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவர் உயிரிழந்த நிலையில் 4 நாட்களுக்கு மட்டும் 3 லட்சம் ரூபாய் தன்னிடம் கட்டணமாக வசூலித்ததாக செந்தில் கூறியுள்ளார்.
கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது மாமியார் மற்றும் தந்தையை கொரானா சிகிச்சைக்கு இம்மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். உரிய முறையில் உணவு கூட வழங்காமல் ஒரு நாளைக்கு கட்டணமாக 35ஆயிரம் ரூபாய் வரை வசூலித்ததாக அவர் கூறியுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவு கூட இல்லாமல், சாதாரண வார்டு அறைக்கே 40 ஆயிரம் ரூபாய் அடவாடியாக கட்டணம் வசூலிப்பதாக சொல்லப்படுகிறது. சிகிச்சைக்கு அனுமதிக்கும் முன்பே கட்டண விபரங்கள் அடங்கிய அனுமதி படிவத்தில் ஒப்புதல் கையெழுத்து வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
இம்மருத்துவமனை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து வடக்கு வட்டாட்சியர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் ஸ்ரீலட்சுமி மருத்துவமனை விதிமீறல்களில் ஈடுபட்டு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததும், முறையான சிகிச்சை வழங்காததும் கண்டுபிடிக்கப்பட்டது. புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், ஸ்ரீலெட்சுமி மருத்துவமனை உரிய விளக்கம் அளிக்காததால், கொரோனா சிகிச்சைக்கான உரிமத்தை ஆட்சியர் ராசாமணி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதில் பாரபட்சம் கட்டுவது, இறுதி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது, தரமற்ற உணவு விநியோகம் என பல புகார்கள் வருவதாக கூறியுள்ள ஆட்சியர், தொடர் ஆய்வு நடத்தி விதிகளை மீறிய 4 மருத்துவமனைகளுக்கு இதுவரை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
class="twitter-tweet">ஒரு நாளைக்கு இவ்வளவு கட்டணமா.. வாரி வாரி வசூல்..! அனுமதியை ரத்து செய்து அதிரடி #Coimbatore | #Covid19 | #CoronaVirus | #CoronaTest | #CoronaTreatment https://t.co/63vSrLmyKI
— Polimer News (@polimernews) September 29, 2020