நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வீட்டை தன் பெயருக்கு எழுதித் தராத தாயை அடித்துக் கொன்று தீயிட்டு எரித்துவிட்டு தலைமறைவான மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தோக்கவாடி விநாயகபுரத்தைச் சேர்ந்த பங்கஜம் என்பவரது மூத்த மகன் பிரகாஷ், தாய் பெயரில் இருந்த வீட்டை தனது பெயரில் எழுதித் தருமாறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான். செவ்வாய்கிழமை நள்ளிரவு நடந்த சண்டையில், இரும்பு குழாயால் பங்கஜத்தின் தலையில் அடித்து கொலை செய்துள்ளான்.
பின்னர் வீட்டு முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த விறகு குவியலில் போட்டு தாயின் உடலை எரித்துள்ளான். சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மனைவி முத்துலட்சுமியை மிரட்டிய பிரகாஷ், தாயின் சாம்பலை அப்புறப்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளான்.
அரண்டு போயிருந்த முத்துலட்சுமி, கணவன் தலைமறைவான பிறகு விவகாரத்தை அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த போலீசார், தடயங்களை சேகரித்துச் சென்று பிரகாஷை தேடி வருகின்றனர்.