தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே ஒரே ஊரில் 5 கண்மாய்களும், 400 ஏக்கர் பரப்பிலான நீர் நிலைகளும் காணாமல் போய் விட்டதாக புகார் எழுந்துள்ளது. சினிமா காட்சி போல நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் குறித்து, அலசுகிறது, இந்த சிறப்புச் செய்தித் தொகுப்பு : -
நடிகர் வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி காட்சி போல, ஒரு நிஜமான சம்பவம் தூத்துக் குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேம்பார் என்ற ஊரில் நிகழ்ந்துள்ளது. இங்கு காணாமல் போனதாக கூறும் 5 கண்மாய்களையும், 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர் நிலைகளையும் இப்பகுதி மக்கள், கடந்த 10 ஆண்டுகளாக தேடி வருகிறார்கள்.
சட்டப் போராட்டத்தை கையில் எடுத்துள்ள குணசேகரன் என்பவர், இதுவரை 5 ஆட்சியர்கள் , 10 தாசில்தார்கள் தான் மாறி விட்டனரே தவிர, பிரச்சினைக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என வேதனை தெரிவிக்கிறார்.
ஆக்கிரமிப்பு பகுதிகள் எல்லாம் இப்போது உப்பளங்களாக மாறி விட்டன. இதனால், இப்பகுதியில் உள்ள 40 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து, விலைக்கு வாங்கும் சூழ்நிலை உருவாகி விட்டதாக தெரிவிக்கிறார்கள், பாதிக் கப்பட்ட பெண்கள்.
கண்மாயை காணோம் - நீர் நிலைகளை காணோம் என்ற புகாருடன் பல கதவுகளை தட்டியும் ஒரு கதவு கூட இன்னும் திறக்கப்படவில்லை. எனவே, அரசு விரைந்து களமிறங்கி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, காணாமல் போன கண்மாய்களையும், நீரோடைகளை மீட்க வேண்டும் என வேம்பார் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் ஊரை காலி செய்வதை தவிர, வேறு வழியில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.
10 ஆண்டுகளாக போராடி வரும் தங்களுக்கு விடிவு காலம் பிறக்குமா ? என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள், வேம்பார் பகுதி மக்கள்.