லாக்டவுன் காலத்தில் பணி இல்லாத சூழலிலும், 24 ஆயிரம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்குவதற்கு விடுதியில் சகல வசதிகளும் செய்து கொடுத்து, தரமான சாப்பாட்டுடன் கை நிறைய சம்பளமும் வழங்கி இருக்கிறார் தாராள மனம் கொண்ட கோவை பனியன் நிறுவன அதிபர் ஒருவர். உழைத்துக் கொடுக்கும் பிள்ளைகளுக்கு செலவழிக்க கணக்கு பார்க்க கூடாது என்று நெகிழும் தொழிலாளர்களின் தந்தை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்று குடும்பத்தினர் வறுமை காரணமாக தங்கள் பெண் பிள்ளைகளை மில் வேலைக்கு அனுப்பிவிட்டாலும், கண்கள் எப்படி முக்கியமோ அதே போல பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து தனது மில்லில் வேலைபார்க்கும் 4 ஆயிரம் பெண்களுக்கு இலவசமாக கணினி பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டபடிப்பை அளித்து வரும் கோவை அரசூர் கே.பி.ஆர் மில்ஸ் அதிபர் கே.பி ராமசாமி என்பவர் தான் 24 ஆயிரம் தொழிலாளர்களுக்கு லாக்டவுனிலும் அள்ளிக்கொடுத்த வள்ளல்..!
லாக்டவுன் அறிவிக்கப்பட்டதும் பதற்றம் கொள்ளாமல் உள்ளூர் தொழிலாளர்கள் தவிர்த்து அங்கேயே தங்கி பணிபுரியக்கூடிய 21 ஆயிரம் பெண் தொழிலாளர்களையும் வீட்டிற்கு அனுப்பி விடாமல், தங்கள் நிறுவன தங்கும் விடுதியில் தங்கி இருக்க அறிவுறுத்திய ராமசாமி, அவர்களுக்கு மூன்று வேளையும் சத்தான சைவ - அசைவ உணவு வகைகள், பொழுது போக்கிற்கு உள்ளேயே மினி திரையரங்கம், மன அழுத்தத்தை போக்க யோகா மற்றும் தியான பயிற்சி, உடலை வலுவாக்க விளையாட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடி நீர், விட்டமின் மத்திரைகள் என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்.
இந்த திடீர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பி பார்த்த வேலையை இழந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்க, தனது நிறுவனத்தில் பணி புரிந்த அத்தனை தொழிலாளர்களையும் தாயன்போடு தனது பிள்ளைகளை போல அரவணைத்து அவர்களுக்கு பணி பாதுகாப்புடன் வேலை பார்க்காத நாட்களுக்கும் சேர்த்து சம்பளத்தை அள்ளிக் கொடுத்தார் அப்பா கே. பி.ராமசாமி என்கின்றனர் பெண் தொழிலாளர்கள்.
40 நாட்கள் ஊரடங்கிற்கு பின்னர் அரசின் அறிவுறுத்தலின் பேரில் குறைந்த பட்ச தொழிலாளர்களுடன் தங்கள் மில் தொடர்ந்து இயங்கினாலும் அனைவருக்கும் தேவையான வசதிகளை தற்போது வரை செய்து கொடுத்து வருவதாகவும், தனது மகளை போலவே அனைவரும் தன்னை அன்போடு அப்பா என்று அழைப்பது பெருமையாக இருப்பதாக தன்னடக்கதுடன் தெரிவிக்கிறார் கே.பி.ராமசாமி.
இந்த லாக்டவுன் எதிர்பார்க்காத ஒன்று என்றாலும் 30 கோடி ரூபாய் அளவிற்கு தொழிலாளர்களுக்காக செலவிடப்பட்டதாக கணக்காளர்கள் தெரிவித்த நிலையில், தனக்கு உழைத்து கொடுக்கும் தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு ஒரு போதும் கணக்கு பார்ப்பதில்லை என்கிறார் கே.பி.ராமசாமி..!
ஊரார் பணத்தை தங்கள் வீட்டு பணம் போல கிள்ளிக்கொடுக்கும் கலியுக வள்ளல்களுக்கு மத்தியில் சத்தமில்லாமல் தர்ம சிந்தனையுடன் அள்ளிக்கொடுத்து, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் கே.பி.ராமசாமி போன்றவர்களின் சேவை நம் நாட்டிற்கு எப்போதும் தேவை..!