மீண்டும் இயங்கத் துவங்கி உள்ள சென்னை மெட்ரோ ரயில் சேவையில், பாதுகாப்பு முன்னேற்பாடாக "தொடுதல் இல்லா பயணச்சீட்டு" என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
"தொடுதல் இல்லா பயணச்சீட்டு" என்ற புதிய சேவையை பெற மெட்ரோ ரயில் பயணிகள் பிளே ஸ்டோரிலிருந்து CMRL என்ற செயலியை மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அதில் புறப்படுமிடம் மற்றும் இறங்குமிடம் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும். அதன்பின்பு கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி ஆன்லைன் மூலமாக QR code வசதிக்கொண்ட பயணச்சீட்டுகளை உறுதி செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழையும்போதும், வெளியேறும்போதும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, எதனையும் தொடாமல் பாதுகாப்பாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் QR code ஸ்கேன் செய்வதற்கான வசதிஅனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தொடுதல் இன்றியும், நீண்ட வரிசைகளில் காத்திருக்காமலும். மெட்ரோவில் பயணிக்கலாம்.
பயணிகள் இந்த QR குறியீடு வடிவில் ஒரு வழி, இருவழி மற்றும் பலவழி பயண சீட்டுகளை தேவைக்கு ஏற்ப பெற்றுக்கொள்ளலாம். அதனோடு பயண வழியை மாற்றி அமைத்தல், பயணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவற்றுக்கான வசதிகளும் இதில் உள்ளன.