சென்னையில் மார்வாடிப் பெண்களிடம் முகநூலில் நட்பாகி, உறவினர் போல பழகி லட்சக்கணக்கில் ஏமாற்றி விட்டு தலைமறைவான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திலீப்பிடம் சிலிப்பான ரிச்கேர்ல்ஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னையில் மார்வாடி குடும்ப பெண்களை குறிவைத்து முகநூலில் அறிமுகமாகும் இளைஞர் ஒருவர், தானும் அதே சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தான் என்று கூறிப் பழகியபின், பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டுத் தப்பி வருவதாக புகார் எழுந்தது.
வேப்பேரியை சேர்ந்த ராக்கி கடலோயா என்ற 40 வயது பெண்ணிடம் முகநூல் மூலம் சகோதரர் போல அறிமுகமான திலீப் என்ற இளைஞர், குடும்பத்தினருடன் நெருங்கிப் பழகியுள்ளார். வீட்டில் இருந்தே ஆயிரக்கணக்கான ரூபாய் தினமும் சம்பாதிக்கும் வகையில் புதிய தொழில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை மோசடியாக பெற்ற திலீப், அதன் பின்னர் அதனை திருப்பிக்கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விரைவாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த வேப்பேரி காவல்துறையினர் அவரது செல்போன் தொடர்பு எண்ணை வைத்து திலீப்பை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் , சேத்துப்பட்டை சேர்ந்த ராஜஸ்தானி பெண்ணிடம் இண்டிகோ ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாக போலி ஆவணங்களை கொடுத்து, சில லட்சங்களை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதும் வெளிச்சத்திற்கு வந்தது. முகநூலில் அன்பாக பேசி மயக்கும் திலீப்பிடம் சிலிப்பான ஐந்திற்கும் மேற்பட்ட வசதியான வீட்டு குடும்ப பெண்களும் தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.
குடும்ப நலனுக்காக கணவன்மார்கள் இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்க, முன் பின் தெரியாத நபருடன் முகநூலில் பழகுவதும், அவர்களை நம்பி வீட்டுக்கே அழைத்து லட்சங்களை அள்ளிக்கொடுப்பதும் குடும்பத்தில் வீணான சச்சரவுகளை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளனர் காவல்துறையினர்.