தமிழகத்தில் வருகிற டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் வீட்டிலேயே இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு மட்டும் 70 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம்க செலவிடப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் உள்ள ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும், அவர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாத இறுதியில் அமலுக்கு வந்த ஊரடங்கால், அத்தியாவசியம் தவிர்த்து அனைத்துவிதமான தொழில்களோடு கோடிக்கணக்கான மக்களும் வருமானம் இழந்து வீட்டுக்குள் முடங்கினர்.
சிலமாதங்கள் கழித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீடிப்பதால் ஏராளமான தொழிலாளர்கள் பணி இழந்து தவித்து வருகின்றனர். பலர் உள்ளூரில் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று தங்கள் குடும்பத்தின் பசியாற்றி வருகின்றனர்.
இந்த கொரோனா சூழலில் டிசம்பர் மாதம் வரை பள்ளிக்கூடங்கள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசின் வழிகாட்டு குழு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் ஊரடங்கு அமலான நாள் முதல் தற்போதுவரை பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே முழு ஊதியம் பெற்றுவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி ஆகியவற்றில் மொத்தம 3 1/2 லட்சம் ஆசிரியர்கள், பணிபுரிந்து வருகின்றனர் இவர்களுக்கு 25 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரை மாத சம்பளமாக வழங்கப்படுகின்றது. அந்தவகையில் ஒரு நாளைக்கு மட்டும் 70 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தில் இருந்து இவர்களுக்கான சம்பளமாக அரசு வழங்குகின்றது.
ஒவ்வொரு மாதமும் எந்த ஒரு பணியும் செய்யாத இந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மொத்தமாக 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் ஊதியமாக வழங்கப்படும் நிலையில், அவர்களின் அறிவாற்றலை அரசின் கொரோனா தடுப்பு பணிகளில் பயன்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்
அதே போல கொரோனாவின் ஆரம்ப காலம் தொட்டு வீதிகளில் இறங்கி வீடுவீடாக, சென்று குப்பைகளை சேகரித்த தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகட்சமாக ஒரு மாத சம்பளம் 8500 மட்டுமே என்கிறார்கள்.
இன்று வரை பணி அனுமதி கிடைக்காமல் முடங்கிப் போயிருக்கும் டிராவல்ஸ் தொழில் செய்யும் ஓட்டுனர்களின் தவிப்புகளோ சொல்லிமாளாது
ஓட்டல்கள் மூடப்பட்டதால் வாழை இலை பயன்பாடின்றி மாதம் சொற்ப வருமானம் மட்டுமே கிடைப்பதாக வேதனை தெரிவிக்கிறார் இலைவியாபாரி ஒருவர்
சில ஆசிரியர்கள் தங்களுக்கு கிடைக்கும் அபரிமிதமான வருமானத்தில் வீடுகட்டி வாடகைக்கு விட்டுள்ளதாகவும், சிலர் வட்டிக்கு விடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
ஆசிரியர்களிடம் 50 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்து அதனை வருமானம் இழந்து தவிபோருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது. மாணவர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வருவதில்லை என்றும் ஆசிரியர்கள் பல்வேறு பணிகளுக்காக அவ்வப்போது வந்து செல்கின்றனர் என்று ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தாங்கள் எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மொபைல் வசதி செய்து கொடுத்தால் ஆன்லைன் வகுப்பு எடுக்க தயார் என்றும் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு அரசு கல்லூரி பேராசிரியர்களும், பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்களும், குறிப்பிட்ட அளவு ரெயில்வே ஊழியர்களும் பணிக்கு செல்லாமலே ஊதியம் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.