சென்னை நசரத்பேட்டையில் உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகத்தில் அழுகிய முட்டை கோஸை பயன்படுத்தி தரமற்ற முறையில் நூடுல்ஸ் மற்றும் சிக்கன் ரைஸ் தயார் செய்து விற்றதாக புகார் கூறிய தம்பதியினர், உணவுப் பார்சலுடன் வந்து கடையில் நியாயம் கேட்டு பலனில்லாததால் போலீசில் புகார் அளித்தனர்...
ஊரடங்கில் மெல்ல தளர்வுகள் அமலுக்கு வந்தாலும், உணவகங்களில் பழையபடி முழுவதுமாக அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்படாததால், பெரும்பாலும் பலரும் பார்சல் பெற்று செல்கின்றனர்.
அந்தவகையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள திண்டுக்கல் தலப்பாக்கட்டி உணவகம் முன்பு பூந்தமல்லியை சேர்ந்த சந்தீப் தம்பதியினர் சாப்பாட்டு பொட்டலத்துடன் சத்தமிட்டப்படி நின்றனர்.
சந்தீப், செவ்வாய்கிழமை மாலை 6 மணியளவில் திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஓட்டலில், செஸ்வான் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், வெஜிடபுள் புலாவ் ஆகியவற்றை பார்சல் வாங்கிச்சென்றதாக கூறப்படுகின்றது. வீட்டில் சென்று மனைவி மற்றும் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிட்ட போது நூடுல்ஸ்சில் கெட்ட வாடை வீசியதாகவும் அதனை சாப்பிட்ட தனது மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சாப்பிடுவதை நிறுத்தியதாக தெரிவித்த சந்தீப், அந்த உணவில் அழுகிய முட்டை கோஸ் போட்டு தயார் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டினர்.
வெஜிடபுள் புலாவ், மஞ்சள் சோறு போல இருந்ததால் அதனையும் முழுவதுமாக சாப்பிடவில்லை என்கிறார் சந்தீப். செஸ்வான் சிக்கன் ரைஸ் பழைய சோற்றில் தயார் செய்தது போல இருந்ததால் விரக்தியில் 3 சாப்பாட்டு பொட்டலங்களுடன் ஆவேசமாக ஓட்டலுக்கு திரும்ப வந்துள்ளனர்.
ஓட்டல் நிர்வாகத்தினர் தகுந்த விளக்கம் அளிக்காமல் ஆமாம் சாப்பாடு சரியில்லை..! என்று ஒப்புக் கொண்டு, மேற்கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் அவரவர் வேலை பார்க்க தொடங்கி விட்டதாக குற்றஞ்சாட்டினார் சந்தீப்...
சந்தீப் தம்பதியினரின் குற்றச்சாட்டு குறித்து தலப்பாகட்டி ஓட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்ட போது, அவர்கள் தரப்பில் மேலாளர் வந்து விளக்கம் அளிப்பார் என ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வைத்து விட்டு, பின்னர் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இதற்கிடையே தம்பதியினர், அங்கு வந்த காவல்துறையினரிடம் தரமற்ற உணவை கொடுத்து ஏமாற்றியதாக புகார் அளித்தனர்..
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, தீ மூட்டி... பாசம் கொட்டி ... நெய்யூற்றி... நேசம் கொட்டி... படைச்சது திண்டுக்கல் தலப்பாகட்டி..! என்று லாவணி பாடும் ஓட்டல் நிர்வாகத்தினர், பிரைடுரைஸுக்கு கொஞ்சூண்டு நல்ல முட்டகோசையும், தரமான அரிசியையும் போட்டு ருசியாக சமைத்திருந்தால் இந்த மாதிரி புகார் எழுந்திருக்காது என்கின்றனர் விவகாரத்தை நேரில் பார்த்தவர்கள்..!