சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கொரோனா தொற்று உறுதியான மூதாட்டி ஒருவர், மருத்துவமனையில் இருந்து ஆட்டோ ஒன்றை வாடகைக்கு பிடித்து நெய்வேலிக்கு தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது. பாட்டி சொன்ன கதையால் போலீசில் மாட்டிய அதிர்ச்சி ஆட்டோ ஓட்டுனர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் ஆட்டோ ஓட்டுனரை மட்டுமல்ல காவல்துறையினரையும் கதை சொல்லி அதிரவைத்த 70 வயது கஸ்தூரிப்பாட்டி இவர்தான்.
எம்.ஜி.ஆர் நகர் கட்டப்பொம்மன் நகரை சேர்ந்த கஸ்தூரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அருகில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஒரே ஒரு நாள் அங்கு சிகிச்சையில் இருந்த நிலையில் அவர் மாயமானார்.
அவர் எங்கு சென்றார் ? என்ன ஆனார் என்பது தெரியாததால் இது குறித்து எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் மருத்துவமனை ஊழியர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து சிகிச்சையில் இருந்த மூதாட்டி எங்கு சென்றார் ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர்.
அப்போது கஸ்தூரி பாட்டியின் மகள் நெய்வேலியில் இருக்கும் தகவல் அறிந்து அவரை தொடர்பு கொண்டு விசாரித்த போலீசார், அவர் அங்கு வந்தால் தகவல் தெரிவிக்கும் படி கூறினர். சிறிது நேரத்தில் கஸ்தூரிப்பாட்டி தனது மகளுக்கு போன் செய்து நெய்வேலிக்கு வந்து கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து அவரது மகள், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு போன் செய்து, தனது தாய் ஆட்டோ ஒன்றில் நெய்வேலிக்கு வந்து கொண்டிருப்பதாகவும் ஆட்டோ ஓட்டுனரின் செல்போனில் இருந்து தனக்கு தகவல் சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் எண்ணை வாங்கிய காவல்துறையினர் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆட்டோவில் வந்துள்ள மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்றும் அவரை வேறு எங்கும் கொண்டு சென்று விடாதீர்கள், அவரை பத்திரமாக எம்.ஜி.ஆர் நகர் அழைத்து வருமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஆட்டோ ஓட்டுனர், சவாரி கிடைக்காத நேரத்தில் நல்ல தொகையை வாடகையாக பேசியதோடு, மகளை பார்க்கும் ஆவலில் நெய்வேலிக்கு செல்வதாக பாட்டிச் சொன்ன கதையை நம்பிச் சென்றதால் அவசரப்பட்டு சிக்கிக் கொண்டோமே என்று மிரட்சியானபடியே எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திற்கு திரும்ப அழைத்து வந்தார்.
காவல்துறையினரிடம் கஸ்தூரியை ஒப்படைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் அங்கிருந்து செல்ல முயல...அவரை நிறுத்தி வைத்தனர் காவல்துறையினர். கஸ்தூரிப்பாட்டியோ தான் மருத்துவமனைக்கு செல்ல முடியாது என்று சாக்கு போக்கு சொல்லி மீண்டும் நழுவ முயன்றார்.
முதலில் அவரை தொட தயங்கி நின்ற போலீசார், எங்கே அவர் மீண்டும் தப்பிச்சென்று விடக்கூடாது என்பதால் அவரை கையோடு கூட்டிச்சென்று வந்த ஆட்டோவிலேயே மீண்டும் ஏற்றி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இங்கு இருந்தால் இறந்து விடுவேன் என்று உடன் இருந்த நோயாளிகள் கூறியதால், பயந்து போய் தனது மகளை தேடிச்சென்றதாகவும் கையில் பணம் இல்லாவிட்டாலும் ஆட்டோ ஓட்டுனரிடம் அதிக வாடகை தருவதாக கூறி அழைத்துச் சென்றதாக கஸ்தூரிப்பாட்டி தெரிவித்திருக்கிறார். ஆட்டோ ஓட்டுனரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனித்திருத்தல், விலகி இருந்தல், முக கவசம் அணிதல் முக்கியம். கொரோனாவை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றினால் அது மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தன்னம்பிக்கையோடு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் கொரோனாவை எளிதாக வெல்ல முடியும் என்பதற்கு குணமடைந்து வீடு திரும்பியவர்களே சான்று..! என்று சுட்டிக்காட்டுகின்றனர்